இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டாலர் மதிப்பில் $23 மில்லியனை (இந்திய மதிப்பில் தோராயமாக 161.5 கோடி ரூபாய்) பிசிசிஐ கட்டவேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இதனை ஒரு சுற்றறிக்கையின் மூலம் பிசிசிஐ-விற்கு தெரியப்படுத்தியுள்ளது ஐசிசி. அவ்வாறு தொகையை செலுத்த தவறினால், இந்தியா நடத்துவதாக இருந்த 2021 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023 உலக கோப்பையை நடத்த இந்தியாவிற்கு அனுமதி தர மாட்டோம் என்று எச்சரித்துள்ளது உலக கிரிக்கெட் அமைப்பான ஐசிசி.
எதற்காக இந்த கட்டணம் ?
2016 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த ஸ்டார் குழுமம் ஐசிசி நடத்தும் போட்டிகளை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தில் இருந்து வருகிறது.
தொடர் முடிவடைந்த பிறகு, ஐசிசி-விற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஸ்டார் ஸ்டார் வரி பணத்தை கழித்துவிட்டு செலுத்தியுள்ளது. அதாவது செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தி மீதி தொகையை ஐசிசி விடம் கொடுத்துள்ளது. ஐசிசி இந்திய அரசாங்கமானது இத்தொடருக்கு வரிவிலக்கு அளிக்கும் என்று நினைத்திருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
வரிவிலக்கு அளிக்கப்படாதனால், வரிப்பணத்தை இந்தியா கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஈடுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது ஐசிசி. கடந்த அக்டோபரில், சிங்கப்பூரில் நடந்த ஐசிசி மீட்டிங்கில், பிசிசிஐ வரி பணத்தை செலுத்த வேண்டும் என்ற முடிவை கூட்டமைப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வரியின் தொகையானது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை நடந்தபோது, பிசிசிஐ-யின் அப்போதைய தலைவராக இருந்த என்.ஸ்ரீனிவாசன் வரித் தொகையை அளிக்க ஒரு மீட்டிங்கில் ஒப்புக்கொண்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் குழப்பத்தை நீக்க, பிசிசிஐ நிர்வாகம் ஐசிசி-யிடம் நடந்த மீட்டிங் காணொளி காட்சிகளின் சில நிமிடங்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் அப்போதைய பிசிசிஐ தலைவரான சீனிவாசன் இதற்கு ஒப்புக் கொண்டாரா என்று ஆராயப்படும் என்று தெரிகிறது.
அடுத்தது என்ன ?
பிசிசிஐ கேட்டுக்கொண்ட காணொளிகளை ஐசிசி இன்னும் தரவில்லை. அவ்வாறு தரும்பட்சத்தில் பிசிசிஐ, அக்காணொளிகளை ஆராயும் என்று தெரிகிறது.
ஆதாரங்கள் கிடைக்க பெறாவிட்டால், சட்ட வல்லுனர்களை கொண்டு பிசிசிஐ இப்பிரச்சனையே எதிர்நோக்கும் என்று கூறப்படுகிறது.
ஐசிசி-யோ பிசிசிஐ $ 23 மில்லியனை தரத் தவறினால், இந்த ஆண்டின் ஒட்டு மொத்த இந்தியாவின் வருவாய் பங்கில், செலுத்தவேண்டிய பணத்தை குறைத்துக்கொள்ளும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், ஐசிசி நடத்தும் 2021 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2023 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே போட்டிகளை நடத்த உரிமம் தரப்படமாட்டாது என்று பிசிசிஐ விற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஐசிசி. இதில் உற்று நோக்கக் கூடிய ஒன்று, தற்போது ஐசிசி தலைவராக பிசிசிஐ-யின் சஷாங்க் மனோகர் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாகிஸ்தான் தொடுத்த வருவாய் இழப்பு வழக்கில் இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிசிசிஐ-க்கு ஏற்பட்ட வழக்கு செலவுகளில், 60 விழுக்காடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்தவேண்டும் என்று கூறியிருந்தது ஐசிசி.