உலககோப்பை கிரிக்கெட் தொடர் மிக பிரமாண்டமாக தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி. இரு அணி ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது இந்த போட்டிக்கு தான். இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடரின் 22வது லீக் போட்டி இங்கிலாந்தில் மேன்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி தனது பாரம்பரிய எதிரி அணியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவண் காயம் காரணமாக விளையாடத நிலையில் அவர்க்கு பதில் விஜய் சங்கர் விளையாடினார். இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் அணி விளையாடி உள்ள நான்கு போட்டியில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களம் இறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 36 பந்துகளிலேயே அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் அவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கே.எல். ராகுல் அரைசதத்தை விளாசிய நிலையில் 57 ரன்னில் வஹாப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார். இந்த ஜோடி முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலககோப்பை போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் ஆட்டத்தின் 30வது ஓவரில் தனது 24வது ஓடிஐ சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரோஹித் சர்மா 125 ரன்களை கடந்த போது 15 முறையாக 125 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதன் பின்னர் அதிரடியாக விளையாடி நிலையில் 140 ரன்னில் ஹசன் அலி பந்தில் அவுட் ஆகிய நிலையில் இன்னும் 4 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை தவறவிட்டார் ரோஹித் சர்மா.
அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் கோலி அரைசதம் விளாசிய நிலையில் அவர் 60 ரன்கள் எடுத்த போது தனது ஓடிஐ கேரியரில் 11,000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையோடு மற்றொரு சாதனையாக முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ரிக்கி பாண்டிங், ஆகியோரை விட குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். வீராட் கோலி 222 இன்னிங்ஸில் 11,000 ரன்களை கடந்துள்ளார். இதன் முலம் 11,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸில் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வீராட் கோலி.