கிரிக்கெட் விளையாடின் பிரமாண்ட தொடரான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது மிகபிரமாண்டமாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் 12வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலககோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் வங்கதேசம் அணியும் மோதின. இரு அணிகளும் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் இங்கிலாந்து அணி களம் இறங்கி விளையாடியது.
இங்கிலாந்தில் அணியில் தொடக்க வீரர்கள் ஜான்னி பேர்ஸ்டோ மற்றும் ஜெசன் ராய் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார் ஜெசன் ராய். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் விளாசிய நிலையில் 51 ரன்னில் மொர்டாஸா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் 21 ரன்னில் சைஃபுடின் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெசன் ராய் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெசன் ராய் 153 ரன்னில் மெஹெடி ஹசன் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் கேப்டன் மோர்கன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்து 64 ரன்னில் சைஃபுடின் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் 6 ரன்னில் முஸ்தாஃபிசுர் ரகுமான் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து கேப்டன் மோர்கனும் 35 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பிளங்கெட் மற்றும் வோக்ஸ் இருவரும் அதிரடியாக முடித்து வைக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 386 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் இருவரும் களம் இறங்கினர். சவுமியா சர்கார் 2 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஷாகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தமீம் இக்பால் 19 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். ரஹீம் 44 ரன்னில் பிளங்கெட் பந்தில் அவுட் ஆக ஆட்டம் திசை மாறியது.
அதன் பின்னர் களம் இறங்கிய மீதுன் டக்அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஷாகிப் சதம் விளாசினார். ஷாகிப் அல் ஹசன் 121 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஹொசைன் 28 ரன்னிலும் முகமதுல்லாஹ் 26 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க வங்கதேச அணி 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜெசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.