உலககோப்பை கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ஷெல்டன் காட்ரெல் வீசினார். அதன் பின்னர் காட்ரெல் வீசிய மூன்றாவது ஓவரில் இமாம்-உல்-ஹக் 2 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய பாபர் ஆஸம் நிலைத்து விளையாட பக்கர் ஜமான் 22 ரன்னில் ஆன்ரே ரஸல் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.
அதன் பின்னர் ரஸல் வீசிய 10வது ஓவரில் ஹாரிஸ் சொகைல் 8 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய பாபர் ஆஸம் 22 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமதும் 8 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்துடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர்.
ஹோல்டர் வீசிய அதே 17வது ஓவரில் இமாத் வாசிமும் 1 ரன்னில் அவுட் ஆக அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் டக் அவுட் ஆக அதற்கு அடுத்த ஓவரில் முகமது ஹபிஸ் 16 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய வாஹப் ரியஸ் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அவுட் ஆகிய நிலையில் பாகிஸ்தான் அணி 21.4 ஓவரிலேயே 105-10 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாய் கோப் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் கெய்ல் ஹசன் அலி வீசிய நான்காவது ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாச ஸ்கோர் உயர்ந்தது. ஷாய் கோப் 11 ரன்னில் அமிர் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டெரன் பிராவோ அதே அமிர் ஓவரில் டக் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் கிறிஸ் கெய்ல் அரைசதம் விளாசி 50 ரன்னில் அவரும் அமிர் ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிகோலஸ் பூரண் அதிரடியாக 34 ரன்கள் அடிக்க மேற்கு இந்திய தீவுகள் அணி உலககோப்பை தொடரில் தனது முதல் வெற்றியே பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஓஷேன் தாமஸ் தேர்வு செய்யப்பட்டார்.