உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டிகள் விளையாடி உள்ளது. இந்திய அணி வரும் 5ம் தேதி தான் தனது முதல் போட்டியை விளையாட உள்ளது. உலககோப்பை தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தங்களின் வெற்றி கணக்கை தொடங்கி உள்ளன. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில் ஐந்தாவது போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் இருவரும் களம் இறங்கினர்.
தமீம் இக்பால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 16 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ஷாகிப் அல் ஹசன் நிலைத்து விளையாடினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சவுமியா சர்கார் 42 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்த போட்டியில் இருவரும் ஒரு சாதனையை படைத்தனர். தற்போதைய வீரர்களில் உலககோப்பை தொடர்களில் அதிக ரன்களை அடித்த ஆசிய வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர்.
இவர்கள் இருவரும் வங்கதேச அணிக்காக பல வருடங்களாக விளையாடி வருகினறனர். இவர்கள் இருவரும் தான் தற்போதைய வங்கதேச அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் முதன் முதலாக விளையாடினர். 2007, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடினர். இருவரும் இதுவரை உலககோப்பை தொடர்களில் 22 போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் ஷாகிப் அல் ஹசன் தென் ஆப்ரிக்கா அணியுடனாக போட்டியுடன் சேர்த்து 615 ரன்கள் உலககோப்பை தொடரில் அடித்துள்ளார். அதே போல் முன்னாள் வங்கதேச அணியின் கேப்டனான முஷ்பிகுர் ரஹீம் 23 போட்டிகளில் 588 ரன்கள் அடித்து இரண்டாவது வீரராக உள்ளார்.
தற்போதைய வீரர்களில் இவர்கள் இருவரும் இந்திய வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் வீராட் கோலி இருவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளனர். மகேந்திர சிங் தோனி உலககோப்பை தொடர்களில் 20 போட்டிகள் விளையாடி 507 ரன்கள் அடித்துள்ளார். அதே போல் வீராட் கோலி உலககோப்பை தொடரில் 17 போட்டி விளையாடி 587 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 75 ரன்களும் முஷ்பிகுர் ரஹீம் 78 ரன்களும் அடித்த நிலையில் இந்த சாதனையை படைத்துள்ளனர். வங்கதேச அணி இன்றைய போட்டியில் 330 ரன்கள் அடித்தது இதுவே ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.