2019 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. ஏனெனில், இதுவரை ஆஸ்திரேலிய அணி 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1987இல் ஆலன் பார்டர் தலைமையில் முதல் முறையாக உலககோப்பையை வென்றது. 1999 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை உலகக்கோப்பையை வென்றது. ஸ்டீவ் வாக் தலைமையில் ஒரு முறையும், ரிக்கி பாண்டிங் தலைமையில் இரண்டு முறையும் வென்றது. 2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணி வென்று ஐந்து முறை உலகக்கோப்பையை வென்ற அணி என பெருமையை பெற்றது. உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் இம்முறையும் தொடருமா? என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும்.
இந்நிலையில் , இந்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருக்கும் 3 முக்கிய வீரர்கள் குறித்து காண்போம்.
#3. மிட்செல் ஸ்டார்க்:
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கடந்த உலகக் கோப்பையில், தனது சிறப்பான வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் மிட்செல் ஸ்டார்க், பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் இதுவரை 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர்களில் ஓரங்கட்டப்பட்டார். எனினும், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் முழு உடல் தகுதி பெறுவார் என நம்பப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில், ஸ்டார்க் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2. ஆரோன் பிஞ்ச்:
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பு ஆரோன் பிஞ்ச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். தொடக்க வீரராக களம் இறங்கும் ஆரோன் பிஞ்ச், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதுவரை அவர், 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4052 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில், 451 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 2 சதமும், 2 அரை சதமும் அடங்கும். 2019 ஆம் ஆண்டில் இதுவரை, 13 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் எடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டில், 11 போட்டிகளில் விளையாடி 493 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க வீரராக களம் கண்டு வந்தார். தற்பொழுது டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளதால், வார்னர் உடன் களம் காண்பார். வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வார்னர் உடன் இணைந்து தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மண்ணிலும் பிஞ்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மண்ணில் கிட்டத்தட்ட பேட்டிங் ஆவ்ரேஜை 35 என்று வைத்துள்ளார்.
#1. டேவிட் வார்னர்:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய வார்னர், ஓராண்டு தடைக்குப் பின் மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார். தொடக்க வீரரான வார்னர், இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4343 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான வார்னர், ஓராண்டு தடைக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருந்தாலும், தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை இழக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வார்னர், இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 611 ரன்கள் எடுத்துள்ளார், தற்போது வரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார், வார்னர். இந்த உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியிலும், கடந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடிய ஐந்து வீரர்களுள் , 32 வயதான வார்னரும் ஒருவர். வார்னரின் அனுபவம் ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் இந்த உலக கோப்பையிலும் தொடருமா என்று பொறுத்திருந்து காண்போம்