உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலக கோப்பை தொடர், வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ரசிகரும் ஆர்வமாய் இந்த தொடரை காண உள்ளனர். 20 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி தனது நாட்டில் உலக கோப்பை தொடரை நடத்த உள்ளது. இங்கிலாந்து மைதானங்கள் சர்வசாதாரணமாக 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் திறன் பெற்றவை. எனவே, இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்களை கூட ஒரு போட்டியில் குவித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல், இந்திய அணியும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. சரியான கலவையுடன் உள்ள இந்திய அணி ஆடும் லெவனில் சந்திக்கவுள்ள 3 தேர்வு பிரச்சினைகளைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.புவனேஸ்வர்குமார் அல்லது முகமது சமி யார் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர்?
கடந்த 18 முதல் 24 மாதங்களில் இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது. அணியில் பும்ரா நிச்சயம் முதல் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் முக்கியமான வீரராவார். இந்திய அணியின் ஆடும் லெவனில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் உட்பட ஹர்திக் பாண்டியா 5வது பந்து வீச்சாளாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான கேள்வி என்றால், பும்ராவிற்கு கூட்டணியாக யார் இருக்கப் போகிறார் என்பதைப் பற்றி தான். 2015 உலக கோப்பை தொடரில் சிறப்பாக பங்காற்றியவர், முகமது சமி. தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவரது பங்கு போற்றத்தக்கது. கடந்த ஓராண்டு காலமாக அணியில் தொடர்ச்சியான பங்களிப்பை ஏற்படுத்தி வருபவர், புவனேஸ்வர் குமார். ஆனால் இவரின் ஐபிஎல் தாக்கம் பேசும்படி இல்லை. இங்கிலாந்து சூழ்நிலைகளில் சிறப்பாகச் ஸ்விங் செய்யும் புவனேஸ்வர் குமார் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை திறம்பட வீசும் வல்லமை பெற்றவர். இதற்கு மாறாக சமி, விக்கெட்களை அற்புதமாக கைப்பற்றும் வேகப்பந்து வீச்சாளர். எனவே, இவர்களில் யாரை இரண்டாவது பந்துவீச்சாளராக அணியில் இணைப்பது என்பதை பற்றிய குழப்பம் சற்று நீடித்த வண்ணமே உள்ளது.
#2.ரவீந்திர ஜடேஜாவா அல்லது இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களா?
நிச்சயம் இந்திய அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இருப்பாரா அல்லது இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களை கொண்டு களம் காண்பார்களா என்பதை பற்றிதான். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஜடேஜா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் உடன் இணைந்து சிறப்பாக செயல்படுவதை காணமுடிந்தது. இவர் பேட்டிங்கில் சீராக ரன்களை குவிக்காவிட்டாலும் ஃபீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்துகிறார். மேலும், தற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராகவும் திகழ்ந்து வருகிறார். எனவே, இந்த குழப்பமும் இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
#1.நான்காம் இடத்தில் யார் இறங்கப் போகிறார்?
இந்திய அணியின் நீண்டகால கேள்வி, நான்காம் இடத்தில் யார் பேட்டிங் செய்ய போகிறார் என்பதைப் பற்றித்தான். இன்னும் இந்திய அணியில் இந்த இடத்தில் யார் பேட்டிங் செய்கிறார் என்பதற்கான பதில் கிடைத்தபாடில்லை. இரு மாதங்களுக்கு முன்னர், அம்பத்தி ராயுடு இந்த இடத்தில் கச்சிதமாக செயல்படுவார் என பேசப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிக்கவில்லை. இதற்குப் பின்னர், விஜய் சங்கர் இந்த இடத்திற்கு பொருந்துவார் என்று தேர்வு குழு தலைவர் கூறினார். ஆனால், ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடு கேள்விக்குறியானது. எனவே, தற்போது பயிற்சியாளர் சாஸ்திரி இந்திய அணிக்கு நான்காமிடத்தில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் தொடருக்கு பின்னர், இந்த கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை. உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இது போன்ற ஒரு கேள்விக்கு இந்திய நிர்வாகத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.