2019 உலகக் கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானஇங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் ஒரே குழுவில் இணைக்கப்பட்டுள்ளன. அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணியுடன் மோதி கொள்ள வேண்டும். இந்த சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இதன் பின்னர், இறுதி ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இம்மாதம் 23 ஆம் தேதி வரை ஒவ்வொரு அணியினரும் தங்களது இறுதி பட்டியலை வெளியிடுவதற்கு ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, எதிர்பார்ப்புகள் மிகுந்த இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் கவனிக்கத்தக்க நான்கு பேட்ஸ்மேன்களை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.
#1.விராட் கோலி:
நவீன கால கிரிக்கெட்டின் அனைத்து 3 வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்றவர், விராட் கோலி. இவர் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,843 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது சராசரி 59.57 என்ற வகையில் மலைக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. எனவே, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை கருத்தில் கொண்டு, உலக கோப்பை தொடரில் இவரின் செயல்பாடு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை முதல் முறையாக இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வழிநடத்தவுள்ளார், விராட் கோலி.
#2.ராஸ் டெய்லர்:
நியூசிலாந்து அணியின் மிக அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான ராஸ் டெய்லர், இதுவரை 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 8026 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 48.34 என்ற வகையில் சிறப்பாக உள்ளது. 2019ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவரின் பேட்டிங் சராசரி 74க்கும் மேல் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு இவரது பேட்டிங் சராசரி 91க்கும் மேல் இருந்து அனைவரையும் வியக்க வைத்தது. நியூசிலாந்து அணிக்காக நான்காம் இடத்தில் களம் இறங்கும் இவர், அணியின் பேட்டிங் தூணாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை.
#3.டேவிட் வார்னர்:
ஓராண்டு பந்தைச் சேதப்படுத்தியதாக தடையில் இருந்த பின்னர், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார், டேவிட் வார்னர். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இவர், தற்போது முடிந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசமாக்கினார். இதனால், மேலும் ஊக்கம் அடைந்த இவரின் பேட்டிங் உலக கோப்பை தொடரில் சிறப்பாக அமையும். இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4343 ரன்கள் குவித்துள்ளார்.
#4.ஜோஸ் பட்லர்:
நவீன கால கிரிக்கெட்டின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார், ஜோஸ் பட்லர். இவர் 131 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவற்றில் 3531 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 119.58 என்ற வகையில் வியப்பூட்டும் அளவிற்கு உள்ளது. தற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட இவர் பந்துவீச்சாளர்களை நொறுக்கி துவம்சம் செய்தார். எனவே, தங்களது சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு பக்கபலமாக இவரது பேட்டிங் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.