ஐசிசி உலக கோப்பை தொடர் என்பது கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடர் ஆகும். இந்த தொடரில் தான் பல்வேறு சாதனைகள் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. 1979 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் புகழ் விவியன் ரிச்சர்ட்ஸ் அபாரமாக சதமடித்து தங்களது இரண்டாவது உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உதவினார். அதேபோல், 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 140 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்து தங்களது மூன்றாவது உலக கோப்பை தொடரை வெல்வதற்கு உதவினார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் கூட இந்திய அணியின் கேப்டன் தோனி 91 ரன்களை அசாத்தியமாக குவித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல பாடுபட்டார். எனவே, பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் இம்மாதம் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடரிலும் கூட முறியடிப்பதற்கு மிகக் கடினமான நான்கு சாதனைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் - கிளென் மெக்ராத் (71 விக்கெட்கள்) :
அனைத்து கால கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத். இவரின் துல்லியமான பந்துவீச்சு தாக்குதல் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை அளித்திருக்கிறது. இதுவரை 4 உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள இவர், 39 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவற்றில், 71 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 68 விக்கெட்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார். தற்போது நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில், இதுவரை அதிக விக்கெட்களை எடுத்த வீரராக டிம் சவுத்தி உள்ளார். இவர் 17 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 33 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். எனினும், இன்னும் இவருக்கு 38 விக்கெட்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. எனவே, நடப்பு தொடரில் இந்த சாதனையை முறியடிப்பதற்கு சாத்தியமில்லை.
#2.உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் - சச்சின் டெண்டுல்கர் (2,278 ரன்கள்):
இதுவரை 6 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2,278 ரன்களை குவித்துள்ளார். இவற்றில், 15 அரை சதங்களும் 6 சதங்களும் அடங்கும். உலகின் வேறு எந்த பேட்ஸ்மேனும் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை 2 ஆயிரம் ரன்களை கூட தொட்டதில்லை. எனவே, 2019 உலகக் கோப்பையில் பங்கேற்கும் மார்ட்டின் கப்தில் அதிக ரன்களைக் குவித்த வீரராக தற்போது காணப்படுகிறார். இவர் இதுவரை 809 ரன்களை குவித்துள்ளார். நிச்சயம் இத்தகைய சாதனையை புரிவதற்கு இவருக்கு இந்த ஒரு உலக கோப்பை போதாது.
#3.உலக கோப்பையில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் - சச்சின் டெண்டுல்கர் (241 பவுண்டரிகள்):
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 200 பவுண்டரிகளை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார், சச்சின் டெண்டுல்கர். 45 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 241 பவுண்டரிகளை விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக, இலங்கையின் குமார் சங்ககரா 94 பவுண்டரிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும், இம்மாத நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களில் எவரும் 90 பவுண்டரிகளை கூட தாண்டியதில்லை.
#1.ஒரே உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் - குமார் சங்ககரா (4 சதங்கள்):
2015 உலக கோப்பை தொடரில் ஓய்வு பெற்ற இலங்கை அணியின் குமார் சங்ககாரா அந்த சீசனில் 4 சதங்களை புரிந்துள்ளார். தொடரின் ஏழு போட்டியில் விளையாடிய இவர், 546 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் 4 வீரர்கள் மட்டுமே அனைத்து தொடர்களையும் சேர்த்து நான்கிற்கும் மேற்பட்ட சதங்களை அடித்து உள்ளனர். எனவே, மேற்குறிப்பிட்ட 4 சாதனைகளும் இம்மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் முறியடிக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் அறவே இல்லை