2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

Eoin Morgan
Eoin Morgan

இங்கிலாந்து சர்வதேச தேர்வுக்குழு எதிர்வரும் 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இன்று(ஏப்ரல் 17) அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இங்கிலாந்து உலக கோப்பை அணியில் எதிர்பாரத வீதமாக எந்த வீரரும் இடம்பெறவில்லை. பொதுவாக அனைவரும் எதிர்பார்த்த வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் பெரிதும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்சர் இங்கிலாந்து முதன்மை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அத்துடன் கிறிஸ் ஜோர்டனையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை அணியில் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் எதிர்வரும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடர் முடிந்த பிறகு வீரர்களின் ஃபிட்னஸை வைத்தே 2019 உலகக் கோப்பைக்கான இறுதி அணி உறுதி செய்யப்படும் என்பதையும் குறிப்பிட்டு கூறியுள்ளது எட் ஸ்மித் தலைமையிலான இங்கிலாந்து தேர்வு தேர்வுக்குழு.

ஓடிஐ/டி20களில் சிறப்பாக அணியை வழிநடத்தி வரும் இங்கிலாந்தின் இயான் மோர்கன் உலகக் கோப்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015 உலகக் கோப்பை முடிவடைந்த பின்னர் நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இயான் மோர்கன் இங்கிலாந்து அணியை ஓடிஐ மற்றும் டி20யில் சிறப்பாக வழிநடத்தியுள்ளார். எனவே இதே கேப்டன்ஷீப்பை எதிர்வரும் உலகக் கோப்பையிலும் கடைபிடிப்பார் என தெரிகிறது.

பேட்டிங்கில் ஜோ ரூட், அலெக்ஸ் ஹால்ஸ், ஜெஸன் ராய் ஆகிய அனுபவ ஆட்டக்காரர்களுடன் அதிரடி வீரர் ஜோ டென்லியும் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜாஸ் பட்லர் உள்ளனர். அத்துடன் பேட்டிங்கிலும் இவர்களது பங்களிப்பு மிக அதிகமாகவே இருக்கும். ஆல்-ரவுண்டர்களாக மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சில் அசத்த டேவிட் வில்லி, லைம் பிளன்கட், மார்க் வுட், டாம் கர்ரான் ஆகியோர் உள்ளனர். இவர்களை தவிர அடில் ரஷித் மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த கால போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு நிறைய போட்டிகளில் காரணமாக இருந்துள்ளார்.

முழு அணி விவரம்:

அலெக்ஸ் ஹால்ஸ், ஜோ டென்லி, ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், லைம் பிளன்கட், மார்க் வுட், டேவிட் வில்லி, அடில் ரஷித், டாம் கர்ரான்.

அணிதேர்வு பற்றி எட் ஸ்மித் கூறியதாவது, "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏப்ரல் 23ற்குள் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை அறிவிக்க சொல்லியிருந்தது. அதன் பேரில் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை நாங்கள் அறிவித்துள்ளோம். 15 பேர் உலகக் கோப்பை அணியுடன் கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் பாகிஸ்தானிற்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் முடிவடைந்த பிறகே நாங்கள் 15 பேர் கொண்ட இறுதி உலகக் கோப்பை அணியை உறுதி செய்வோம்" என கூறியுள்ளார்.

மேலும் ஜோஃப்ரா ஆர்சர் தேர்வு பற்றி எட் ஸ்மித் கூறியதாவது, "உள்ளுர் கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டு டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து தேர்வுக்குழுவை ஜோஃப்ரா ஆர்சர் கவர்ந்துள்ளார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்".

Quick Links

App download animated image Get the free App now