உலகக் கோப்பையில் இந்தியா மெதுவான தொடக்கத்தை அமைப்பது நல்லதன்று. ஏனெனில், ஒவ்வொரு அணியும் வெற்றி பெற நிச்சயமாக மற்ற அணிகளுடன் பலத்த பலப்பரீட்சையில் இறங்கும். அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் போன்ற அணிகளின் தற்போதைய நிலையானது மிகவும் அருமையாக உள்ளன. அவ்வாறெனின், ஒவ்வொருவரும் அரை இறுதிப் போட்டிக்காக தயாராக உள்ள ஒரு வலுவான போட்டியாளர்களாவர்.
கடந்த உலகக் கோப்பையை போன்று எந்த அணி வலுவாக உள்ளதென்று அறியமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தும் அணிக்கு வெற்றியை நோக்கிய பயணம் எளிதாக அமையலாம். " முதற்கோணல் முற்றும் கோணல்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொரு அணியும் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முழு முயற்சியோடு தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர். இவ்வாறாக முதல் போட்டியின் ஆதிக்கம் கடைசி போட்டி வரை இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதனால், இந்திய அணி நம்பிக்கையோடு அணியில் விளையாடும் வீரர்களின் தேர்வை நன்றாக அமைத்தல் வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் பவுலர்கள் தேர்வு நன்றாகவே உள்ளது. கேப்டன் கோலி ஸ்பின்னர் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, இரண்டாம் நிலை ஸ்பின்னராக ஜடேஜாவிற்க்கு மாற்றாக யுவேந்திர சாகல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் 2 திறமை வாய்ந்த போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளார். இவர்களுள் ஹர்திக் பாண்டியா எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு போட்டியாளர். மற்றொரு பக்கம் விஜயசங்கர். இவருடைய பேட்டிங்கில் தற்போது பெரும் ஏமாற்றமே வந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் இவர் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் பெரிதும் ஸ்பின் பவுலர்கள் பந்துகளில் தடுமாறியதோடு பெரிதாக எந்த ரன்களையும் குவிக்கவில்லை என்பதே நிசப்தமான உண்மை.
பொதுவாக நான்காவது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் ஸ்பின் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ளும் சூழ்நிலையே இருக்கும். எனவே இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாடும் வாய்ப்பானது விஜயசங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோருள் ஒருவருக்கு கிடைக்கலாம். தென் ஆப்பிரிக்காவில் மிக அருமையான ஸ்பின் பவுலர்களான இம்ரான் தாஹிர் மற்றும் தாபிரியஸ் ஷாம்ஷி போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு சவாலாக அமையலாம்.
எதுவாக இருந்தாலும் சங்கர் நடுத்தர வரிசையில் விளையாடுவது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் அவர் விளையாடுவது ரசிகர்களுக்கு விருப்பமற்ற ஒரு தேர்வாகும். இருப்பினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவது பற்றி ஒருபுறம் கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ பி எல் போட்டியின் போது காயம் கண்ட கேதர் ஜாதவ் மீண்டும் விளையாட இருக்கும் சூழ்நிலையில் நடுத்தர வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு இது ஒரு சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.