எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கமிட்டி, 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவித்திருக்கிறது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இடம்பெறாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 21 வயதான இவர் பேட்டிங்கில் அற்புதமாக ரன்களைக் குவித்து வருகிறார். இரண்டு முறை உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ரிக்கி பாண்டிங் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூட உலக கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டின் அவசியத்தை கூறிவந்துள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட டெல்லி அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். இது மட்டுமல்லாது, தற்போது டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் ரிஷப் பண்டின் பங்கு ஏராளம்.
நடப்பு 2019 ஐபிஎல் தொடரில் மூன்று அரை சதங்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட ரன்களை லீக் போட்டிகளில் குவித்துள்ளார். மேலும், தொடரின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இது உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவரின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது. மறுமுனையில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவற்றில் 162 ரன்கள் குவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை தடுக்க முற்பட்ட போது கேதர் ஜாதவ் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இதனை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இவரே 2019 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களில் காயமடைந்த முதல் வீரர் ஆவார்.
ஒருவேளை உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு, இவர் காயத்தில் இருந்து மீண்டால இந்திய அணிக்கு சிக்கல் இல்லை. ஒருவேளை இவரின் காயம் தொடர்ந்து நீடித்தால், இவருக்கு பதிலாக அணியில் காத்திருப்பும் பட்டியலில் உள்ள ரிஷப் பண்ட் அல்லது அம்பத்தி ராயுடு ஆகியோரில் யாரேனும் ஒருவர் அணியில் இடம் பெறலாம். இந்த இரு வீரர்களில் ரிஷப் பண்ட் தற்போது ஃபார்மில் உள்ளதால், அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 25 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் பெரும்பாலான வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார்கள்.
அதுபோல, இந்திய அணியிலும் இது போன்ற ஒரு நிகழ்வு ஏற்படக்கூடாது என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இவர் விரைவிலேயே குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஐசிசி விதிகளின்படி, வரும் 22ம் தேதிக்குள் அணியை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, கேதர் ஜாதவ் குணமடைந்து விட்டால் மாற்றங்கள் எதுவும் பிசிசிஐ மேற்கொள்ளாது. ஒருவேளை இதற்கு எதிராக நடந்தால், ரிஷப் பண்ட் அணியில் இணையலாம்.