2019 உலக கோப்பை தொடர் துவங்கி ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ளது. இதுவரை நடைபெற்ற 11 போட்டிகளில் சில மறக்கதக்க அனுபவங்களை அளித்தன. தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களைக் குவித்தது. அதன் பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியை 202 ரன்களுக்கு சுருட்டியது, இங்கிலாந்து. வங்கதேச அணி பலம் மிகுந்த தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு தாக்குதலை சிரமமின்றி எதிர்கொண்டு 330 ரன்களை குவித்து சாதனை படைத்தது. மேலும், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சதம் அடித்தும் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது, இங்கிலாந்து அணி. எனவே, இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் படைக்கப்பட்ட 5 சிறந்த பேட்டிங் சாதனைகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#5.பென் ஸ்டோக்ஸ் - பாகிஸ்தான் அணிக்கு எதிராக 89 ரன்கள்:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தனது ஆல் ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவினார். மேலும், அற்புதமான ஒரு கேட்சை பிடித்து வியத்தகு சாதனை படைத்தார். அதன் பின்னர், நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரின் அற்புதமான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்களை குவித்து இருந்தது. 79 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார், பென் ஸ்டோக்ஸ். இருப்பினும், அந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
#4.நாதன் கவுல்டர் நிலே - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 92 ரன்கள்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியைப் பெற்ற கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது, ஆஸ்திரேலிய அணி. இருப்பினும், 16.1 ஓவர்களில் 79 ரன்களை குவித்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தகுதி கொண்டிருந்தது. இதன்பின்னர் ,விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து 68 ரன்களை தங்களது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கினர். ஆந்திரே ரசல் வீசிய பந்தில் இந்த இணை பிரிந்தது. அதன் பின்னர், களமிறங்கிய பந்துவீச்சாளரான நாதன் கவுல்டர் நிலே சிறப்பானதொரு இன்னிங்சை அளித்து வரலாறு படைத்தார். ஸ்டீவன் ஸ்மித் மற்றும் நாதன் கவுல்டர் நிலே ஆகியோர் இருவரும் இணைந்து 102 ரன்களை குவித்த நிலையில் காட்ரெல் பந்துவீச்சில் இவர்களது பார்ட்னர்ஷிப் உடைந்தது. விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும் வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து 60 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் கவுல்டர் நிலேவின் ஆட்டத்தில் 8 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.. இவரின் அபார ஆட்டத்தால் 49 ஓவர்களில் 288 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 273 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஆஸ்திரேலிய அணி. உலகக் கோப்பை வரலாற்றில் எட்டாம் இடத்தில் களம் இறங்கிய வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக நாதன் கவுல்டர் நிலேவின் 92 ரன்கள் பதிவாகியுள்ளது.
#3.ஜோஸ் பட்லர் - பாகிஸ்தானுக்கு எதிராக 103 ரன்கள்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 349 ரன்கள் சேசிங் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது, இங்கிலாந்து அணி. அணியின் நட்சத்திர பேட்ஸ்மேங்களான ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து தங்களது அணியை வெற்றி பெற வைக்க முயன்றனர். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் சீரான பந்துவீச்சை தாக்குதலால் 14.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இங்கிலாந்து அணி இழந்தது. அதன் பின்னர், 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மேற்கூறிய வீரர்கள் இருவரும் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 75 பந்துகளை சந்தித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் சதமடித்து சாதனை படைத்தார். இவர் சந்தித்த 76 பந்துகளில் 9 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட மொத்தம் 106 ரன்கள் குவித்தார். மேலும், நடப்பு உலக கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார், ஜோஸ் பட்லர்.
#2.ஜோ ரூட் - பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள்:
2019 உலக கோப்பை தொடரின் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்தார், ஜோ ரூட். டிரென்ட் பிரிட்ஜ்ஜீல் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது ஓவரிலேயே ஜாசன் ராய் ஆட்ட்மிழந்தார். அதன்பின்னர், களம் புகுந்த ஜோ ரூட், ஆட்டத்தில் தமது பொறுப்பை உணர்ந்து 349 என்ற ஸ்கோரை இங்கிலாந்து அணி எட்ட முயன்றார். ஜோஸ் பட்லர் உடன் இணைந்து 130 ரன்களை தமது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கினார், ஜோ ரூட். அதன் பிறகு சதாப் கான் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் 104 பந்துகளை சந்தித்த ஜோ ரூட் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட மொத்தம் 107 ரன்களை குவித்து இருந்தார்.
#1.ரோகித் சர்மா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்கள்:
இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டியான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 228 ரன்களை சேஸ் செய்ய இருந்தது. ரபாடாவின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர், கே.எல்.ராகுலுடன் இணைந்த ரோஹித் சர்மா அரை சதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். ராகுல் தனது விக்கெட்டை இழந்த போதிலும் ரோகித் சர்மா தொடர்ந்து களத்தில் நின்று 123 பந்துகளை சந்தித்து பொறுமையாக சதமடித்தார். மேலும், நடப்பு உலகக் கோப்பை தொடரின் சதமடித்த முதல் மற்றும் ஒரே இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.