ஐசிசி உலக கோப்பை தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியும் எந்த ஒரு முக்கிய வீரரையும் இழக்க விரும்பாது. இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட கௌரவமாகும். இருப்பினும், சில வீரர்கள் காயங்களால் அவதிப்பட்டு தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். எனவே, 2019 உலகக் கோப்பை தொடரில் காயத்தால் அவதிப்பட்டு அவர்களுக்கு மாற்றாக அறிவிக்கப்பட உள்ள வீரர்கள் பற்றிய தெளிவான விவரத்தை பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.
#1.கேதர் ஜாதவ்:
இந்தியாவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இடம்பெற்றார். எதிர்பாராத விதமாக இவருக்கு ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். இவரது காயம் தொடர்ந்து நீடித்தால், உலக கோப்பையில் இவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். ஆனால், இதனை தெளிவுபடுத்தும் விதமாக சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் காயத்திலிருந்து மீண்டு விட்டதாகவும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க போவதாகவும் அறிவித்து இருந்தார், கேதர் ஜாதவ்.
#2.டாம் லதம்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார், நியூசிலாந்தை சேர்ந்த டாம் லதம். எனவே உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் சந்திக்கவுள்ள நியூஸிலாந்து அணியில் இவர் இடம் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக டாம் பிலண்டல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் காண உள்ளார். நியூசிலாந்து அணியின் தேர்வு குழு தலைவர் அணியில் வாட்லிங் மற்றும் டிம் செய்ஃபர்ட் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
#3.ரபாடா மற்றும் டேல் ஸ்டெயின்:
தென் ஆப்பிரிக்காவின் இரு வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா மற்றும் டேல் ஸ்டெயின்ஆகியோர் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இருவரும் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட காயங்களால் தொடரில் இருந்து வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் கிப்சன், இந்த இரு வேகப்பந்து வீச்சாளரும் உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் காயத்திலிருந்து மீண்டு உடல்தகுதியை எட்டிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#4.முகமது அமீர்:
வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், சமீபத்தில் காயமடைந்து பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கினார். பாகிஸ்தான் அணி தேர்வாளர்கள் இவரை உலகக்கோப்பை அணியில் இணைக்கவில்லை. ஒருவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றால் முகமது அமீர் இந்த மிகப்பெரிய தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு உடல் தகுதியை எட்டி விட்ட பின்னர், அமீரின் உலக கோப்பை அழைப்பு வரலாம்.