கடந்த இரு வருடங்களாக இந்தியா ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால், 12வது உலக கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்க காத்திருக்கின்றது, இந்திய அணி. இந்த தொடர் வெற்றிகளுக்கு மிகப் பெரும் காரணமாய் அமைகிறது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு. குல்தீப் யாதவ் மற்றும் யூஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை முறையே 41 மற்றும் 44 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதோடு ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் பந்துவீசி அதிகபட்ச விக்கெட்களை இந்த குல்தீப்-சாஹல் இணை கைப்பற்றி வருகின்றது.
குல்தீப் யாதவின் 30 சதவீத விக்கெட்டுகள் முதல் மூன்று பேட்ஸ்மென்களை குறி வைக்கின்றது. அதேபோல, சாஹல் கைப்பற்றும் 25 சதவீத விக்கெட்கள் இந்த மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களையே குறிவைத்துள்ளது. இவர்கள் இருவருமே ஒரு நாள் போட்டிகளில் தமது பவுலிங் எக்கானமியை 5க்கு மிகாமல் வைத்துள்ளனர். மேலும், எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் துருப்புச்சீட்டாக இந்திய அணிக்கு இவர்கள் பயன்பட்டு வருகிறார்கள். 2015 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறு வீரர்களில் நான்கு வீரர்கள் இந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்கள். அதேபோல், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 5 ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் ஏழாம் இடத்திலும் சாகல் எட்டாம் இடத்திலும் சர்வதேச பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் உள்ளனர். மேலும், இவர்களின் ஆதிக்கம் இங்கிலாந்து மண்ணிலும் எடுபடும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட சாகல் ஐபிஎல் போட்டிகளிலும் 18 விக்கெட்களை கைப்பற்றி நம்பிக்கை அளித்து வருகிறார். அதேபோல் ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், குல்தீப் யாதவ் பற்றி எந்த ஒரு கவலையும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்ததில்லை.
எனவே, உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி பயணம் இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களை பெரும்பாலும் நம்பி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் இவர்கள், இங்கிலாந்து மண்ணில் இருந்து தங்களது மாயஜால சுழல்பந்து வித்தையை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றப்பட்டுள்ளதால் எதிரணியினரின் ரன் தாக்கத்தை குறைக்க இவர்களின் பந்துவீச்சு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கபடுகிறது