உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மண்ணில் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. உலக கோப்பை தொடரில் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் 10 பலமிக்க அணிகள் களம் இறங்க காத்திருக்கின்றன. இம்முறை அனைத்து அணியினரும் ஒரே குரூப்பில் இணைக்கப்பட்டு தலா 9 ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதன் பின்னர், புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே, இந்த உலக கோப்பை தொடரில் தங்களது அணிகளுக்காக வெற்றியைத் தேடித் தரக்கூடிய 3 விக்கெட் கீப்பர் களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஜோஸ் பட்லர்:
இங்கிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர், தற்போதைய கிரிக்கெட் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும், ஆட்டத்தை சிறந்த முறையில் முடிக்கும் வீரர்களில் ஒருவராகவும் இவர் வலம் வருகிறார். குறுகிய கால போட்டியில் அபாரமாக சிக்சர் அடித்து பலமுறை இங்கிலாந்து அணிக்காக வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3531 ரன்களையும் 188 டிஸ்மிசல்களையும் செய்துள்ளார். நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கூட இவர் அபாரமாக ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தொடரிலும் தனியாளாக இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் வீரராக இவர் உள்ளார்.
#2.தோனி:
இதுவரை 346 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களையும் 434 டிஸ்மிசல்களையும் புரிந்துள்ளார், மகேந்திர சிங் தோனி. உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்களை புரிந்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் தோனி, ஐபிஎல் போட்டிகளிலும் கூட 400 ரன்களை கடந்து தமது ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார். ஆட்டத்தின் இறுதிகட்ட ஓவர்களை சிறப்பாக சமாளித்து ரன்களை குவிக்கும் இவர், இந்த உலக கோப்பை தொடரில் தன் பணியை சிறப்பாக புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.சாய் ஹோப்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், சமீபத்திய சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார். இவர் இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 டிஸ்மிசல்களையும் 2173 ரன்களையும் குவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் விளையாடி 470 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியமடைய செய்தார். மேலும் அந்த தொடரில் "தொடர் நாயகன்" விருதையும் தட்டிச் சென்றார். எனவே, உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பிக்கை அளிக்கும் வீரர்களில் ஒருவராக திகழும் இவர் இம்முறை தமது மாயஜால பேட்டிங்கால் பல சாதனைகள் புரிவார் என எதிர்பார்க்கபடுகிறது.