ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடக்க உள்ளது. 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இப்போட்டியில் உலகின் முன்னணி அணிகள் பங்கேற்கும். அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்கி ஜூலை நடுப்பகுதி வரை நடக்கும் இப்போட்டி 45 நாட்கள் நடக்கும்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அணிகள் இதில் பங்கேற்கும். தகுதி சுற்றுமூலம் சிறிய அணிகளான அரபு எமிரேட்ஸ், ஐயர்லாந்து, கென்யா, நெதர்லாந்து போன்றவை உலகக்கோப்பைக்கு தகுதி பெறும். இதுவே பல வருட பழக்கம். ஆனால் இம்முறை ஐசிசி அதன் விதியை மாற்றி வெறும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும்படி செய்துள்ளது. இதனால் பல சிறிய நாட்டின் கண்டனங்களை ஐசிசி அடைய நேர்ந்தது.
முன்னணி அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதற்கு முன் உலகக்கோப்பையில் சிறிய அணிகளிடம் தோல்விகளைச் சந்தித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பல புதிய திறமை வாய்ந்த வீரர்களை உலகிற்கு அறிமுகம் செய்யப் பயனாக இருந்தது. ஆனால் இம்முறை அதற்கான வாய்ப்புகள் இல்லாதது பெரிய வருத்தமே.
தகுதிச்சுற்றின் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி இம்முறை முன்னேறி உள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே நேரடியாகத் தகுதிப்பெற்ற மற்ற 8 அணிகளுடன் இணையும். மொத்தம் 10 அணிகள் மட்டும் என்பதால் குழுக்களாகப் பிரிக்காமல் ரவுண்ட் ராபின் (Round-Robin) என்ற வடிவத்தை ஐசிசி பயன்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக இதே போன்ற முறை 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட்டது. இந்த வடிவத்தால் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளிடம் தலா ஒருமுறை முதல் சுற்றிலேயே பங்கேற்க நேரிடும்.
முதல் சுற்றின் முடிவில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும். இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதலாம் மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிகளிடையே முதல் அரை இறுதிச்சுற்று நடைபெறும். இரண்டாம் மூன்றாம் அணிகளுக்கு நடுவே அடுத்த அரை இறுதிச்சுற்று நடைபெறும். இதில் முறையே வெற்றி பெறும் அணிகள் அடுத்த சுற்றான இறுதிச்சுற்றில் மோதிக்கொள்ளும்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது. அதனால் இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி போராடும். சொந்த மண்ணில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு அதிக சவாலான அணியாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமான தளம் இங்கிலாந்து. மைதானமும் சற்று சிறிய அளவிலேயே இருக்கும். இதனால் நல்ல பேட்டிங் வரிசையை உடைய இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுக்க உதவியாக இருக்கும்.
ரவுண்டு ராபின் (Round - Robin) வடிவம் என்பதால் இந்திய அணி ஓரிரு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தாலும் மற்ற போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டால் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறலாம். முன்னதாக 2007 ஆம் நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்தியா. தோனி போன்ற முன்னணி வீரர்கள் தனது வழக்கமான ஆட்டத்தையும் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினால் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெறும்.