ஐசிசி உலகக் கோப்பை 2019: ஒவ்வொரு அணியிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய வீரர்

முஸ்தபிஸுர் ரஹ்மான்
முஸ்தபிஸுர் ரஹ்மான்

ஐசிசி உலகக் கோப்பை தனது 12வது பகுதியை அடைந்துள்ளது. இதுவரை நடந்த 11 பகுதிகளிலும் ஏதாவது ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. எல்லா அணியிலும் ஒரு முக்கிய வீரர் இருப்பார். எடுத்துக்காட்டுக்கு இந்திய அணியை பொறுத்தவரை விராத் கோலி ஒரு முக்கியமான வீரர். ஆனால் இத்தொகுப்பில் நாம் காணவிருப்பது அதைத் தாண்டி போட்டியின் சூழ்நிலையை மாற்றக்கூடிய ஒரு வீரரைப் பற்றி. அவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பந்துவீச்சாளராகவோ இருக்கலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை பெரும்பாலும் விராத் கோலியே அணியை எல்லாப் போட்டிகளிலும் வழிநடத்தி வெற்றி தேடித் தந்துள்ளார். இதனால் தனி நபராக பல அழுத்தத்தை எதிர் கொண்டு வருகிறார். அவர் சரியாக விளையாடவில்லை என்றால் பின் வருபவர்களும் சொதப்பிவருகின்றனர். இவரை தாண்டி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய ஒரு இந்திய வீரர் என்றால் ஹர்திக் பாண்டியா அவர்களை சொல்லலாம். அணிக்கு தேவை ஏற்படும்போது விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிக்ஸர் மழை விளாசக்கூடியவர்.

#முஸ்தபிஸுர் ரஹ்மான்- வங்காளதேசம்

வங்காளதேச அணியை பொறுத்தவரை உலகக் கோப்பையில் கால் இறுதி ஆட்டத்தை தாண்டி சென்றதில்லை. ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இவர்களது சமீபத்திய வெற்றி தமீம் இக்பால் மற்றும் ஷகிப் உல் ஹசன் மூலமாகவே வந்துள்ளது. இதைத்தாண்டி இந்த அணிக்கு யார் முக்கிய வீரராக அமைவார் என்று பார்த்தால் முஸ்தபிஸுர் ரஹ்மான் எனலாம்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் வங்காளதேச அணிக்காக 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்களை சாய்த்துள்ளார். இவரது எக்கானமி ரேட்டும் 4.58 என சீராக உள்ளது. இது ஒரு முன்னணி வீரருக்கான சரியான தொடக்கம்.

#அகிலா தனஞ்செயா - இலங்கை

அகிலா தனஞ்செயா
அகிலா தனஞ்செயா

சென்ற ஆண்டுகளில் இலங்கை அணியை பொறுத்தமட்டில் நல்ல வீரரை அறிமுகம் செய்துள்ளார்களா என்று பார்த்தால் அகிலா தனஞ்செயா என்ற சுழல் பந்து வீச்சாளரை கூறலாம். இதுவரை 30 ஒரு நாள் இன்னிங்ஸில் 46 விக்கெட்களை வீழ்த்தி எக்கானமி ரேட்டாக 5.1 வைத்துள்ளார். ஆப் ஸ்பின், லெக் ஸ்பின், கூகுலி, கேராம் பந்து வீசுவதில் வல்லவர். இலங்கை அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினால் இவரது பந்துவீச்சு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஆனால் தற்போது நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவரது பந்துவீச்சு முறையற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது இவர் எந்த ஒரு போட்டியிலும் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர் தனது பௌலிங் முறையை மாற்றி வர நான்கு மாதங்கள் உள்ளதால் உலகக்கோப்பை அணியில் பங்குபெறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம். ஒருவேளை இவர் அணியில் இணையாவிட்டால் அது அந்த அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படும்.

#ஆண்ட்ரே ரசல் - மேற்கிந்திய தீவு

ஆண்ட்ரே ரசல்
ஆண்ட்ரே ரசல்

கிறிஸ் கெய்ல், சுனில் நரேன் போன்ற வீரர்கள் அணியில் இருக்கும் பொழுது இதைத்தாண்டி ஒரு முக்கிய வீரர் என்று பார்த்தால் ஆண்ட்ரே ரசல் என சொல்லலாம். எதிரணி வீரர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளுவதில் திறமை வாய்ந்தவர். இதோடு பந்துவீச்சிலும் நன்றாக செயல்படக்கூடியவர். 52 நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் ஆயிரத்திற்கும் மேலான ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சை பொருத்தவரை 65 விக்கெட்டுகளை வீழ்த்தி எக்கானமி ரேட்டாக 5.8 என வைத்துள்ளார். இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 130.4.

இறுதி ஓவர்களில் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதில் சிறந்து விளங்குபவர். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா எவ்வளவு முக்கியமோ அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆண்ட்ரே ரசல் மிக முக்கியமானவர்.

#ரஷீத் கான் - ஆப்கானிஸ்தான்

ரஷீத் கான்
ரஷீத் கான்

20 வயதே ஆன இவர் கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். சிறுவயதிலேயே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் திகழ்கிறார். 52 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 118 விக்கெட்டுகளை சாய்த்து ஒரு இமாலய சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் மட்டும் 70 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவரது எகானமி ரேட் 3.9 ஆக உள்ளது. பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகிறார். முன்னதாக சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் தனது பேட்டிங் திறனை அபாரமாக ஆடி வெளிப்படுத்தினார். இதேபோன்று இவர் விளையாடினால் ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றை தாண்டி செல்வதில் எந்த முட்டுக்கட்டையும் இருக்காது.

#ஃபகர் ஜமன் - பாகிஸ்தான்

ஃபகர் ஜமன்
ஃபகர் ஜமன்

சர்வதேச போட்டிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது பாகிஸ்தானை சேர்ந்த ஃபகர் ஜமன். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பரம எதிரியான இந்திய அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர். அதிரடியாய் விளையாடக்கூடிய இவர் 1275 ரன்களை எட்டி, 3 சதங்களையும் விளாசியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 58 எனவும் ஸ்ட்ரைக் ரேட் 97.7 எனவும் உள்ளது. இதைத்தாண்டி பாகிஸ்தான் அணியிலிருந்து ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.

#மார்ட்டின் கப்டில் - நியூசிலாந்து

மார்ட்டின் கப்டில்
மார்ட்டின் கப்டில்

ரோகித் சர்மா போல் அதிரடியாய் ஆடக்கூடிய தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில். 156 இன்னிங்சில் 5976 ரன்களை குவித்துள்ளார். இவர் அதிகபட்சமாக 237 ரன்களை ஒரே இன்னிங்சில் விளாசியுள்ளார். உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ரன்னாகவும் உள்ளது. இதுவரை உலகக்கோப்பையை வென்றிடாத நியூசிலாந்து அணி இம்முறை கோப்பையை வெல்ல முழு வீச்சில் களமிறங்கும். சென்ற உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

#கிறிஸ் மோரிஸ் – தென்னாபிரிக்கா

கிறிஸ் மோரிஸ்
கிறிஸ் மோரிஸ்

சமீபத்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் ஒரு ஆல்ரவுண்டராக தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் முழுத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர். இவரது மோசமான ஆட்டம் காரணமாக 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெரிய தோல்வியை தென்ஆப்பிரிக்கா அணி பெற்றது. இருந்தாலும் இவரின் முந்தைய ஆட்டங்களின் வெளிப்பாட்டை பார்த்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் இவருக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் அணிக்கு வெற்றி தேடித் தருவார். 33 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி எக்கானமி ரைட்டாக 5.6 வைத்துள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை இவரது ஸ்ட்ரைக் ரேட் 98 மற்றும் இதுவரை எடுத்த ரன்கள் 393.

#கிளென் மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்

இவருக்கு அறிமுகம் தேவை இல்லை. எதிரணி பந்துவீச்சை பவுண்டரிக்கு அடிப்பதில் பெயர் பெற்றவர். பேட்டிங், பவுலிங், பில்டிங் என முத் தரப்பிலும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கக் கூடியவர் ஆஸ்திரேலியா ஒரு நாள் அணியில் அவ்வப்போது இடம்பிடித்து வருகிறார். இதுவரை 78 இன்னிங்சில் 2242 ரன்களை எடுத்ததோடு ஸ்ட்ரைக் ரேட்டாக 121 என வைத்துள்ளார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு வேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆப் ஸ்பின் பந்து வீச்சாளரான இவர் 45 விக்கெட்களை சாய்துள்ளார்.

#ஹர்திக் பாண்டியா – இந்தியா

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்திய அணி பல திறமை வாய்ந்த வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குல்தீப் யாதவ், சாஹல் போன்ற வீரர்கள் விராட் கோலி தலைமையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் தனியாளாய் போராடினார். அதிரடி ஆட்டக்காரரான இவர் உலகக்கோப்பை போன்று பெரிய தொடரில் நிச்சயம் ஒரு துருப்புச் சீட்டாய் இந்திய அணிக்கு செயல்படுவார். இதுவரை 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா 670 ரன்கள் சேர்த்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 115 எனவும் பவுலிங்கில் 40 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

#ஜோஸ் பட்லர்- இங்கிலாந்து

ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணிக்கு 2018 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர் பட்லர். தொடக்க வீரராக களமிறங்கும் இவர் சிக்ஸர் மழை பொழிவதில் வல்லவர். இதுவரை 101 ஒருநாள் இன்னிங்சில் 3176 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 117 இதில் 6 சதங்களும் அடங்கும். பேட்டிங் இல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் திறமையானவர். சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை வாய்ப்பு அதிகம் இருப்பதால் பட்லர் போன்ற வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

Quick Links

App download animated image Get the free App now