"எங்க நாட்டுக்காக விளையாட வாங்க" - அம்பத்தி ராயுடு-க்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.

Ambatti Rayudu.
Ambatti Rayudu.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத அம்பத்தி ராயுடுவை தங்கள் நாட்டுக்காக விளையாட வரும்படி ஐஸ்லாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக பாதியிலேயே விலகினர். ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக் கோப்பையில் அளித்து வருகிறது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது அணி தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக இந்திய அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடுவுக்கு இந்த உலக கோப்பையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக ராயுடுவும் தனக்கு பதிலாக இந்த உலக கோப்பையில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதற்கு தன்னுடைய ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் '3-டி' (3D) ட்வீட் மூலம் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

https://twitter.com/icelandcricket/status/1145764325036036096?s=19

மேலும் இந்த உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் காயமடைந்து விலகியதற்கு பதிலாகவும் ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. இவர்களுக்கு மாற்று வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்படும் ராயுடுவுக்கு ஆதரவளிப்பதற்காக ஐஸ்லாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. இவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில்,

"சமீபத்தில் இந்திய அணியில் இணைந்துள்ள மயங்க் அகர்வால் ஒட்டுமொத்தமாக 72.33 என்ற சராசரியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்தியுள்ளார். எனவே எங்களது இந்த ஒப்பந்தத்தை படிக்க ராயுடுவிற்கு '3-டி' கண்ணாடிகள் தேவைப்படாது. நீங்கள் எங்களுடன் வந்து இணையுங்கள் ராயுடு".

இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ராயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ராயுடு அவ்வாறு தங்கள் நாட்டுக்காக விளையாடும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமை வழங்குவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் இது போன்ற கிண்டலான ட்வீட்டுகளை பதிவிடுவது இது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் 17 சிக்சர்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அறியப்படும் 'ரஷித் கான்' 9 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்தாமல் 110 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான சாதனை படைத்தார்.

https://twitter.com/icelandcricket/status/1140973557624840192?s=19

இதனை கிண்டல் செய்யும் வகையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், "ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதம் இப்பொழுது அடிக்கப்பட்டுள்ளது. அதுவும் 56 பந்துகளில் 110 ரன்கள். மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தீர்கள் ரஷீத் கான் !!" - என பதிவிட அது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 'ராயுடு'க்கு தங்கள் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட அழைப்பு விடுத்து அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம். இதற்கு ராயுடு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now