தற்போழுது தென் ஆப்ரிக்கா அணி இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று ஜோஹானாஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி இலங்கை அணியை எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியினரை தனது சுழல் பந்து வீச்சால் சுருட்டினார் இம்ரான் தாஹிர். முதல் ஒரு நாள் போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இம்ரான் தாஹிர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா அணியின் மூத்த வீரர் இம்ரான் தாஹிர் வரும் உலக கோப்பை தொடருடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இம்ரான் தாஹிர் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்தவர். இவர் பாகிஸ்தான் U-19 அணியில் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் A அணியிலும் விளையாடி உள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் வலது-கை பந்து வீச்சாளர்கள் தேவை இல்லாததால் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி திறமையை வெளிபடுத்தியதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாட முடிவெடுத்தார். தென் ஆப்ரிக்கா அணியில் முதன் முதலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டு தேர்வு குழு பிரச்சனை காரணமாக வெளியேறினார். பின்னர் உடனடியாக அந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் எடுக்கபட்டு ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படாமல் நாடு திரும்பினார். இதனை தொடர்ந்து முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றார் இம்ரான் தாஹிர்.
இம்ரான் தாஹிர் ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடியவர். இம்ரான் தாஹிர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் அந்த தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெறுமையை அடைந்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2015 உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடினார். இதுவரை இம்ரான் தாஹிர் 95 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 156 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார், சாராசரியாக 24.56 வைத்துள்ளார். அதே போல் டி-20 போட்டியில் 37 போட்டிகள் விளையாடி 62 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 57 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இவர் வரும் 2019 உலக கோப்பை தொடருடன் ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெற உள்ள நிலையில் டி-20 போட்டிகளில் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து டி-20 லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.