ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்தியா அணியை பொறுத்த வரை மிகவும் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. எனெனில் இந்த தொடரை உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கு முன்பு ஒய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ரா இருவரும் அணிக்கு திரும்புகின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 15ம் தேதி ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர்களான ரோகித், தவாண், தோனி, கோலி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த தொடரில் இடம் பெறுவோர் தான் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் கே எல் ராகுலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு ஒரு சிறப்பு வாய்ந்த தொடராக அமைய உள்ளது. பொதுவாக இந்திய அணியில் பல சாதனைகளை படைத்த ஜாம்பவான்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பெவிலியன்களுக்கு இந்திய வீரர்களின் பெயர் சூட்டி பெருமை படுத்துவது வழக்கம். இது போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் சிறந்த வீரராக திகழ்ந்துள்ளார். அதற்காக இந்தியாவில் உள்ள மும்பை வான்கடே மைதானத்தின் வடக்கு பகுதி பெவிலியனுக்கு சுனில் கவாஸ்கர் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. அதேப் போன்று மும்பை வான்கடே மைதானத்தில் விதல் டிவேசா பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று விஜய் மெர்சென்ட் பெவிலியனும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொச்சின் கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் பெவிலியனும் மும்பை வான்கடே மைதானத்தில் தெற்கு பகுதியில் சச்சின் டெண்டுல்கர் பெவிலியன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று மற்ற வீரர்களுக்கும் பெவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனியின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ( M S DHONI PAVILLION) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தோனியின் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியனின் புகைபடம் தற்போழுது இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணிக்காக மூன்று விதமான உலக கோப்பையை பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் சிறந்ந கேப்டனாகவும் திகழ்ந்தவர். அதற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த தொடரில் தோனியின் பெயரில் ராஞ்சியில் பெவிலியன் அமைக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் தோனிக்கு பெரிதும் எதிர்பார்க்கபடும் தொடராகவும் கருதப்படுகிறது.