இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளையுடன் முடிவடைகிறது, நாளை கடைசி ஒருநாள் போட்டியான ஐந்தாவது போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தொடரை 4-1 என வெல்ல இந்தியா முனைப்புடன் இருக்கின்றது, மறுபக்கத்தில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற தயாராகி வருகின்றது.
நான்காவது போட்டியில் இந்திய அணியை எளிதாக நியூசிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது, T20 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஐந்தாவது போட்டியின் வெற்றி நியூசிலாந்து அணிக்கு பெரிய நம்பிக்கை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர் :
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து நேருக்கு நேராக 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இவற்றில் இந்திய அணி 54 முறையும் நியூசிலாந்து அணி 45 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் நேருக்கு நேர் :
இதுவரை நியூசிலாந்து அணி 36 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்தில் பங்கேற்றுள்ளது, இவற்றில் நியூசிலாந்து அணி 22 வெற்றிகளையும் இந்திய அணி 13 வெற்றிகளையும் கொண்டு, உள்ளூர் அணியான நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
வெலிங்டனில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதன் முன்பு, வெஸ்ட்பாக், வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி :
ஜனவரி 31, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து 150 ரன்களை குவித்தார்கள். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவில் 303 சேர்த்தது.
கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி 216 ரன்களில் ஆட்டமிழந்தது, அதிகபட்சமாக கோலி 82 ரன்களும் தோனி 47 ரன்களும் குவித்தனர்.
இந்தியா :
இந்திய அணி 3 போட்டிகளில் வென்று தொடரை வென்றிருந்தாலும் நான்காவது போட்டியில் மிக மோசமாக தோல்வி அடைந்தது. மேலும் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால் தோனி அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தோனி உடல் நலமுடன் இருக்கிறார் மற்றும் 5வது போட்டியில் பங்கேற்பார் என உறுதியளித்துள்ளார்.
பேட்டிங் :
இந்திய அணிக்கு தோனி திரும்புவதால் ராயுடு அல்லது தினேஷ் கார்த்திக் தோனிக்கு வழி விட நேரிடும். ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் நல்ல துவக்கம் தருவது அணிக்கு பலமே. சென்ற போட்டியில் தனது முதல் போட்டியை விளையாடிய ஸுப்மன் கில் தனது திறமையை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
பந்துவீச்சு:
இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது, நான்காவது போட்டியில் சொதப்பிய குல்தீப் யாதவ் மற்றும் சஹால் மீண்டும் தங்களது திறமையை 5வது போட்டியில் நிரூபிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, இருப்பினும் இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
இவர்கள் ஒருவருக்கு பதிலாக முகமது சிராஜ் வருவார் என எதிர்பார்க்கலாம். முகமது ஷமியும் புவனேஸ்வர் அல்லது கலில் அஹமதுக்கு பதிலாக இடம்பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் அணி :
ரோகித் சர்மா, தவான், கில், தோனி, கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்டியா, சஹால், சிராஜ், ஷமி, கலீல் அஹமது.