உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்புகிறது, இந்திய அணி. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மாத கால அட்டவணை கொண்ட அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் பங்கேற்கும் இந்திய அணி முதலாவதாக டி20 தொடரில் விளையாடுகிறது அதன்படி இன்று நடைபெறும் முதலாவது டி20 போட்டி அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணியில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில், பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவ வீரர்களான கீரன் பொல்லார்டு மற்றும் சுனில் நரின் ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் இம்முறை களமிறங்க காத்திருக்கின்றனர். ஜடேஜா மற்றும் புவனேஸ்வர்குமார் ஆகியோரை தவிர குருநால் பாண்டியா, தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர், ராஹுல் சாகர், கலீல் அஹமது, நவ்தீப் சைனி போன்ற சர்வதேச அளவில் அனுபவம் இல்லாத இந்திய பந்துவீச்சாளர்களை வருத்தி எடுக்கும் முனைப்பில் உள்ளனர், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள். உலக கோப்பை தொடரில் வெறும் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 9 இடத்திற்கு தள்ளப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 வடிவத்தில் உலகின் தலைசிறந்த அணியாகவே இன்றளவும் உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் கனடா டி20 போட்டியில் மூத்த வீரர் கிறிஸ் கெயில் பங்கேற்று வருவதால் இந்த டி20 தொடரில் இடம் பெறாவிட்டாலும் அணியில் சிம்ரன் ஹெட்மேயர், நிக்கோலஸ் பூரன், லெவிஸ் போன்றோர் உள்ளமையால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. எதிர்பாராதவிதமாக நேற்று காயமடைந்த ஆல்ரவுண்டர் ஆந்திரே ரசல் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜாசன் முஹம்மது அணியின் இணைக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் ரசல் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று கேப்டன் பிராத்வெயிட் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் மூன்று வெற்றிகளை குவித்து இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புளோரிடாவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த டி20 போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் ஒன்று அமெரிக்காவிலும் மற்றொன்று மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ளது.
கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:
#1.ராகுல் சாகர்:
இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் ராகுல் சாகர் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும், நான்காவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு இவரும் ஒரு காரணமாய் அமைந்தார். இதன் மூலம், இந்திய ஏ அணியில் தொடர்ந்து இடம்பெற்று தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியமையால் இந்திய டி20 அணியின் தற்போது இணைந்துள்ளார். இவருடன் அணியில் இணைந்திருக்கும் சகோதரரான தீபக் சாகரும் இன்றைய போட்டியில் களம் இறக்கப்பட்டால் பதான் மற்றும் பாண்டிய சகோதரருக்கு பின்னர், இந்திய அணியில் விளையாடும் மூன்றாவது சகோதர்கள் என்ற சாதனையை படைப்பார்கள்.
#2.நிக்கோலஸ் பூரன்:
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சில அபார ஆட்டங்களை அளித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார், நிகோலஸ் பூரன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இவர் இடம் பெற்றிருந்ததால் , இந்திய பந்துவீச்சாளர்களின் இயல்பை அறிந்து ஆக்ரோஷமாக செயல்படும் வீரராகவும் உள்ளார். எனவே, இவரின் தாக்கம் இன்றைய போட்டியிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி:
விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருநால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், தீபக் சாகர், ராகுல் சாகர், கலீல் அஹமது மற்றும் நவ்தீப் சைனி.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
பிராத்வெயிட், ஜான் கேம்பெல்,எவின் லீவிஸ்,ஷிம்ரான் ஹெட்மெயர், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்டு, ரொவ்மேன் பவல், கீமோ பால், சுனில் நரின், ஷெல்டான் காட்ரெல், ஒஷோன் தாமஸ், அந்தோனி பிராம்பெல், காரி பியரி மற்றும் ஜாசன் முஹம்மது.