இந்திய கிரிக்கெட் அணி 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி 3வது முறையாக சேம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் மோதிய நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு இவ்வருடம் தகர்க்கப்பட்டது. இது உலகில் உள்ள இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. காரணம் தகுதிச் சுற்றில் இந்திய அணி மிகவும் வலிமையுடன் திகழ்ந்ததே ஆகும். கண்டிப்பாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இப்பயணத்தில் 3 ஓடிஐ, 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாட உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பூம்ரா ஆகியோருக்கு ஓடிஐ/டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆகஸ்ட் 22 அன்று தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இருவரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இந்த டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் முதல் டெஸ்ட் சேம்பியன் ஷீப் போட்டியாகும். இந்தியாவில் 2023ல் ஓடிஐ உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், சில மாற்றங்களை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான இந்திய அணி ஜீலை 19 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் இங்கு இந்திய ஒருநாள் அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி காண்போம்.
#1 தினேஷ் கார்த்திக்-ற்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர்
தினேஷ் கார்த்திக்கிற்கு 2019 உலகக்கோப்பை தொடரின் கடைநிலையில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் ஆடும் XIல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 14 ரன்களே இவரால் குவிக்க முடிந்தது. நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் தினேஷ் கார்த்திக் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டை இழந்தது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இவர் விக்கெட் இழக்கும் போது இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தினேஷ் கார்த்திக் கடந்த சில வருடங்களாக தனது ஆட்டத்திறனை பெருமடங்கு மேம்படுத்தியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் சிறப்பானதாக இருந்தது இல்லை. இவரது பேட்டிங் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக உள்ளது. கடைநிலையில் ஆட்டத்தின் பொறுப்புணர்ந்து விளையாடும் திறன் கொண்டவர். 34 வயதான தினேஷ் கார்த்திக் 2023 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு. அத்துடன் இந்த உலகக்கோப்பை தொடருடன் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.
ஸ்ரேயஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அவர் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என தெரிகிறது. இவர் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் அருமையாக விளையாடும் திறன் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாகவும், சரியாக ரன் ஓட்டத்தையும் மேற்கொள்பவர். மேலும் களத்தில் அதிக ரன்களை தனது ஃபீல்டிங்கால் தடுக்கும் திறமை உடையவர்.