மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளை டி20யில் வைட்-வாஷ் செய்த இந்திய அணி இதே நம்பிக்கையுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்திய அணி மீண்டும் சில புது முகங்களை இத்தொடரில் பேட்டிங் வரிசையில் களமிறக்கி சோதனை செய்து பார்த்து வருகிறது. ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்க உள்ளது. எனவே இந்திய அணி இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய அதே இந்திய அணியுடன் களமிறங்க உள்ளது. எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதித் தோல்வியை படிப்படியாக மறப்பதற்கு முயற்சி செய்யும்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள் பற்றி காண்போம்.
#5 ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் உலகக் கிரிக்கெட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒரு வீரர் ஆவார். தனது பேட்டிங் திறமையினால் பார்வையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். மகேந்திர சிங் தோனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ள காரணத்தால் அவரது ஆட்டத்திறனை மிகவும் உன்னிப்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனித்து வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக தோனி ஓய்வுக்கு பிறகு இடம்பெற்ற விருத்திமான் சாகா காயம் காரணமாக ஒரு தொடரிலிருந்து விலகிய போது ரிஷப் பண்ட் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக வெளிபடுத்தினார். இருப்பினும் இவரது விக்கெட் கீப்பிங் திறன் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. இவர் தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னை முழுவதுமாக நிறுபிக்கவில்லை.
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. ஷீகார் தவான் காயம் காரணமாக விலகிய காரணத்தால் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களம் கண்டார். ஆனால் அந்த பேட்டிங் வரிசையில் அவரது சிறப்பான ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. மகேந்திர சிங் தோனி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இதுவே ரிஷப் பண்ட்-ற்கு தன்னை நிறுபிக்க தக்க தருணமாகும்.
#4 ரோகித் சர்மா
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரர் ரோகித் சர்மா. இத்தொடரில் 81 சராசரியுடன் 648 ரன்களை விளாசி அதிக ரன்களை குவித்தோராக வலம் வந்தார். குறிப்பாக இத்தொடரில் 5 சதங்களை விளாசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். ஐசிசி உலகக் கோப்பை XIல் ரோகித் சர்மா மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பையில் அசத்திய ரோகித் சர்மா அதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தன்னை முழுவதுமாக நிருபித்து விட்டார். குறிப்பாக மிகவும் கடுமையான ஆடுகளமான லாடர்ஹீல்-ல் நடந்த இரண்டாவது டி20யில் 51 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.
ரோகித் சர்மா கரேபியன் மண்ணில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 54.33 சராசரியுடன் 489 ரன்களை விளாசியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக ரோகித் சர்மா கரேபியன் மண்ணில் ஒரு சதம் கூட விளாசவில்லை. ரோகித் சர்மா தற்போது உள்ள சிறந்த ஆட்டத்திறனிற்கு கண்டிப்பாக சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.