உலககோப்பை தொடர் வரும் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்நிலையில் அதற்காக ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும். அதன்படி இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி கார்டீப் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மொரட்டஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டம் துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஷிகர் தவான் ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில் முஸ்தபிசூர் ரகுமான் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் விராத்கோலி ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். அப்போது அணியின் ஸ்கோர் 50 ரன்னாக இருந்த நிலையில் ரூபெல் பந்தில் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராத்கோலியும் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ராகுல் நிலைத்து ஆடினார்.
ஒருகட்டத்தில் இந்திய அணி 102 ரன்களுக கு 4 விக்கெட்டை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய தோணி ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். இருவரும் சேர்ந்து வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தை விட்டு வெளியே பறக்க விட்டனர். ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 108 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா வந்த வேகத்தில் 21 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய தோணி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 359 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரூபெல் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
தனைத்தொடர்ந்து 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. வங்கதேச அணி சார்பில் லிட்டன் தாஸ் மற்றும் சவுமியா சர்காரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான துவக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 49 ஆக இருந்தபோது சவுமியா சர்கார் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் அடுத்த பந்திலேயே ஷகிப் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன் பின் வந்த ரஹீம் தாஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசி அசத்தினர்.
சிறப்பாக ஆடி வந்த தாஸ் 73 ரன்னில் சகால் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் 90 ரன்னில் இருந்த போது ஆட்டமிழந்தார். இறுதியில் வங்கதேச அணி 49.3 ஓவர் முடிவில் 264 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி போட்டியை 95 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.