இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானிற்கு எதிரான கடந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது இந்தியா.
உலகக்கோப்பை வரலாற்றில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக 6 முறை வெற்றி பெற்றிருந்தது. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் வென்றது ஆச்சரியம் அளிக்கும் விதமாக இல்லை.
ரோகித் சர்மா விளாசிய 140 ரன்கள் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அத்துடன் மற்ற வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக மற்றொரு வெற்றியை இயல்பான பெற முடிந்தது.
பாகிஸ்தானகற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே சோதனை இந்திய நட்சத்திர பௌலர் புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே.
அந்தப் போட்டியில் அவரது மூன்றாவது ஓவரை வீசிய போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் அடுத்த 3 உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார் புவனேஸ்வர் குமார். இந்திய அணி ஏற்கனவே 3 வாரங்கள் ஷீகார் தவானின் பங்களிப்பை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தவானிற்கு மாற்று வீரராக களம் கண்ட தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி
இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்கு சிறந்த மாற்று வீரராக தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் முகமது ஷமி இருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறப்பான விக்கெட் வீழ்த்தும் திறன் மீண்டும் இவ்வருட தொடக்கத்தில் வெளிபட்டது. அதனால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணில் நடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அத்துடன் நியூசிலாந்திற்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆடும் XI ல் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் 2015 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்போது புவனேஸ்வர்க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் உடனடி மாற்று வீரராக முகமது ஷமி ஆடும் XIல் சேர்க்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. முகமது ஷமி புவனேஸ்வர் குமாருக்கு சரிசமமான அனுபவத்தை ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் வைத்துள்ளார். ஆட்டத்தின் தொடக்கம், மிடில், இறுதி என அனைத்திலும் அதிரடியாக வீசும் திறமை கொண்டவர். தற்போது இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுள் முகமது ஷமி மட்டுமே அதிக உலகக்கோப்பை அனுபவத்தை தன்வசம் வைத்துள்ளார். இவர் 17 விக்கெட்டுகளை 2015 உலகக்கோப்பையில் வீழ்த்தியுள்ளார். இந்த அனுபவம் இந்திய அணிக்கு தற்போது தேவைப்படுகிறது.
தேவையான இரண்டாவது சிறந்த மாற்றம்
புவனேஸ்வர் குமாரின் விலகலினால் இந்திய அணி சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்சினை கடைநிலை பேட்டிங் தான். நம்பர் 8 பேட்டிங் வரிசையில் புவனேஸ்வர் குமார் ஒரு சிறந்த ஆட்டக்காரர். ஆனால் ஹர்திக் பாண்டியாவை விட சிறப்பானவர் அல்ல. மற்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் புவனேஸ்வர் குமார் நிலைத்து நின்று ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த பேட்டிங்கை வெளிபடுத்தக் கூடியவர்.
ஆனால் இதே ஆட்டத்தை முகமது ஷமியிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. ஷமி ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் வீசும் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் திசையில் விளாசவே முயற்சி செய்வார். புவனேஸ்வர் குமாரின் விலகலின் மூலம் இந்திய கடைநிலை நம்பர்-8 லிருந்தே ஆரம்பமாகிறது.
சேஸிங்கில் கடைநிலை பேட்டிங் என்பது ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த பேட்டிங் வரிசை மோசமாக இருந்தால் ஆட்டம் முழுவதுமாக எதிரணிக்கு மாறி விடும். இந்திய அணிக்கு அதிர்ஷ்ட வசமாக தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குறைவான இலக்கை ரோகித் சர்மாவின் சதம் நிர்வகித்து விட்டதன் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு களமிறங்க வாய்ப்பில்லாமல் போனது.
இனிவரும் போட்டிகளில் விராட் கோலி டாஸ் வென்றால் சேஸிங்கை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய டாப் ஆர்டர் சொதப்பினால் கடும் நெருக்கடியை இந்தியா சந்திக்க நேரிடும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எம்.எஸ்.தோனி, விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகியோர் போதுமான அளவு மிடில் ஆர்டரில் நிலைப்பதில்லை.
கேதார் ஜாதவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியில் சேர்ப்பதன் மூலம் பௌலிங் வலிமை கூடுவது மட்டுமல்லாமல் கடைநிலை பேட்டிங் வலிமையும் அதிகரிக்கும். தனது ர ஸ்பின் மூலம் எதிரணியை தடுமாறச் செய்வதில் வல்லவர். ஜடேஜாவை அணியில் சேர்க்கப்பட வேண்டுமெனில் கேதார் ஜாதவின் இடத்தில் மட்டுமே சேர்க்க முடியும். இதுவரை இந்தியா பங்கேற்ற மூன்று உலகக்கோப்பை போட்டியிலும் அவரது பங்களிப்பு இல்லை. அத்துடன் பேட்டிங்கில் சற்று தடுமாறுவதை கடந்த போட்டியில் நாம் காண முடிந்தது. இருப்பினும் அதிக பௌலிங் வாய்ப்பு அணியில் இருந்தால் கேப்டனுக்கு சற்று குழப்பம் ஏற்படும். ஆசிய அணிகளுக்கு எதிராக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது இந்திய அணியின் சூழ்சியாக கூட இருக்கலாம்.
ஜடேஜாவை நம்பர் 8 பேட்ஸ்மேனாக களமிறக்குவதன் மூலம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவ்வித பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தலாம். ஜடேஜா சிறந்த எகானமிக்கல் பௌலர் மற்றும் கடைநிலை ஓவர்களில் விஜய் சங்கரை விட சிறந்த பேட்ஸ்மேன். இடதுகை பேட்ஸ்மேனான இவர் எதிரணி பௌலர்களை கலங்கடிப்பதில் வல்லவர். தற்போது உள்ள உலகக்கோப்பை அணியில் முகமது ஷமிக்கு பிறகு கடந்த கால உலகக்கோப்பை தொடரில் இந்தியா சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் ஜடேஜா இரண்டாவதாக உள்ளார்.
ஜடேஜாவை ஆடும் XIல் இனைப்பதன் மூலம் 3 ஆல்-ரவுண்டர்களின் சிறப்பான ஃபீல்டிங்கை நாம் காணலாம். ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் விலகலின் மூலம் இந்திய அணி மிடில் ஓவரில் விக்கெட் வீழ்த்த தடுமாற வாய்ப்புள்ளது. இருப்பினும் முகமது ஷமி ஆடும் XIல் இடம்பெறுவதன் மூலம் அந்த குறையும் நீங்கும்.