நியூஸிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய ஏ அணி நியூஸிலாந்து ஏ அணியை 3-0 என வைட் வாஷ் செய்துள்ளது.
சென்ற மாதம் இந்திய ஏ அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக பலப்பரீட்சை மேற்கொண்டது. இரு அணிகளுக்கு இடையே ஆன மூன்று 4 நாள் போட்டி தொடர் மழையின் காரணமாக யாருக்கும் வெற்றி இன்றி டிராவில் முடிந்தது.
வெளிநாடுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என்ற நோக்கில் பிசிசிஐ இந்த தொடருக்கு ஏற்பாடு செய்தது.
பின்னர் இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடின. மணிஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணியில் அக்சார் படேல், விஜய் ஷங்கர், ஷ்ரேயாஸ் ஐயர், கலீல் அகமது, க்ருனால் பாண்டியா போன்ற சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
நியூஸிலாந்து ஏ அணியை அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் வழி நடத்தினார். போட்டி தொடர் முழுவதும் நியூஸிலாந்து நாட்டின் மவுண்ட் மௌன்கவுனை நகரில் நடந்தது.
தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜிம்மி நீசம் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 309 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் போட்டியை வென்றது. தமிழக வீரர் விஜய் ஷங்கர் 80 பந்துகளில் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணிஷ் பாண்டே முறையே 54 மற்றும் 42 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹாமிஷ் பென்னட் மற்றும் லூக்கி பெர்கெசென் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வில் யங் அதிகபட்சமாக 102 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக வொர்க்கர் 99 ரன்கள் குவித்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 190 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பில் கலீல் அஹ்மத் மற்றும் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடந்த போட்டியை போலவே இந்திய அணி இலக்கை ஒரு ஓவர் மீதமிருக்கையில் அடைந்தது. கேப்டன் மணிஷ் பாண்டே அதிரடியாக ஆடி 109 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஜய் ஷங்கர் தலா 59 ரன்கள் குவித்து மணிஷ் பாண்டே க்கு உறுதுணையாக இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹாமிஷ் பென்னட் மற்றும் கோள் மக்கோஞ்சி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஏற்கனவே தொடரை வென்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. துவக்க ஆட்டக்காரர் அமோல்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். அங்கீட் பவான் 42 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அணியின் செத் ரான்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி 44.2 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சித்தார்த் கவுல் 4 விக்கெட்கள் சாய்த்தார். இதன் மூலம் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. 3-0 என்ற கணக்கில் போட்டி தொடரை முழுமையாக வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் விஜய் ஷங்கர் அதிகபட்சமாக 188 ரன்கள் குவித்தார். சித்தார்த் கவுல் அதிகபட்சமாக மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்மூலம் இவ்விருவரும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.