ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி

Virat kholi celibriates Indian team victory against Australia
Virat kholi celibriates Indian team victory against Australia

உலககோப்பை தொடர் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

India v Australia - ICC Cricket World Cup 2019
India v Australia - ICC Cricket World Cup 2019

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் தந்தனர். ஒரு முனையில் ரோகித் சர்மா நிதானமாக ஆட மறுமுனையில் ஷிகார் தவான் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகளாக விளாசினார். இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். அணியின் ஸ்கோர் 127 ஆக இருக்கும் போது ரோகித் ஷர்மா 57 ரன்கள் எடுத்த நிலையில் குல்டர் நைல் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராத்கோலி ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியை காட்டத் துவங்கியது. சிறப்பாக ஆடிவந்த ஷிகர் தவான் சதத்தினை கடந்தார். இது ஐசிசி தொடர்களில் அவரின் ஆறாவது மற்றும் உலககோப்பை தொடரில் மூன்றாவது சதமாகும். பார்மில் இல்லை என கூறிவந்தவர்களுக்கு தன் சதத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் தவான்.சதமடித்து அடுத்த சில ஓவர்களிலேயே ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

Stoines picks 2 wickets in final over
Stoines picks 2 wickets in final over

அனைத் தொடர்ந்து அதிரடி வீரரான ஹார்திக் பாண்டியா நான்காவது இடத்தில் களமிறங்கினார். அவர் வந்த முதல் பந்து முதலே அதிரடியாக ஆடத்துவங்கினர். மறுமுனையில் விராத்கோலி அரைசதத்தை கடந்தார். அதிரடியாக ஆடிய பாண்டியா 48 ரன்களில் கம்மிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோணியும் ருத்ரதாண்டவம் ஆடினார். 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்த அவர் கடைசி ஓவரில் ஸ்டைனிஸ் பந்தில் ஆட்டமிழக்க அதே ஓவரில் விராத்கோலியும் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டைனிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க், குல்ட்டர் நைல் மற்றும் கம்மிங்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Warner scored half century
Warner scored half century

அதனைத் தொடர்ந்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கினை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பின்ச் மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு நிதானமாக துவக்கம் தந்தனர். வார்னர் நிதனமாக ஆட மறுமுனையில் பின்ச் அதிரடியை காட்டத் துவங்கினார். ஆனால் அவரது அதிரடி நீடிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பின்ச் வெளியேறினார். அடுத்து ஸ்மித் களமிறங்கினார். அவர் வார்னருடன் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு நேருக்கடியை தந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடிவந்த வார்னர் அரைசதத்தை கடந்தார். அதனை அடுத்து 56 ரன்கள் எடுத்த நிலையில் சகால் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார் அவர்.

Bhuvaneshwar kumar picks 3 wickets
Bhuvaneshwar kumar picks 3 wickets

அதன் பின்னர் பந்துகளைக் காட்டிலும் அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் காவாஜா மற்றும் ஸ்மித் அதிரடியாக ஆடி வந்தனர். ஸ்மித் அரை சதத்தினை கடந்தார். மறுமுனையில் காவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் 69 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழக்க அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஸ்டைனிஸும் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் வழக்கம் போல சகால் பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள்.அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அலெக்ஸ் கேரி மட்டும் நிலைத்து ஆடி 29 பந்துகளில் அரை சதத்தினை கடந்தார். இருந்தாலும் அவரால் அணியை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை. இறுதியில் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 316 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளும், சகால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக ஆடி சதமடித்த அசத்திய ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now