வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடிவந்த வார்னர் அரைசதத்தை கடந்தார். அதனை அடுத்து 56 ரன்கள் எடுத்த நிலையில் சகால் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார் அவர்.
அதன் பின்னர் பந்துகளைக் காட்டிலும் அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் காவாஜா மற்றும் ஸ்மித் அதிரடியாக ஆடி வந்தனர். ஸ்மித் அரை சதத்தினை கடந்தார். மறுமுனையில் காவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் 69 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழக்க அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஸ்டைனிஸும் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் வழக்கம் போல சகால் பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள்.அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அலெக்ஸ் கேரி மட்டும் நிலைத்து ஆடி 29 பந்துகளில் அரை சதத்தினை கடந்தார். இருந்தாலும் அவரால் அணியை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை. இறுதியில் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 316 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளும், சகால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக ஆடி சதமடித்த அசத்திய ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.