உலககோப்பை தொடரானது மிகப் பிரம்மாண்டமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது இன்று நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மோதின. அதில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை உலககோப்பை தொடரில் ஆறு முறை மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கிய இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சப்ராஸ் அகமதுபந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாததால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன் படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக கருதப்பட்டாலும் அந்த இடத்தினை ராகுல் நிரப்பி விட்டார். இவர் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து அணிக்கு நல்ல துவக்கத்தினை தந்தார். ராகுல் நிதானமாக ஆடி வர மறுமுனையில் ரோகித் ஷர்மா அதிரடியாக ஆடி வந்தார். இவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் அணி பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டும் அது பலனளிக்கவில்லை. சிறப்பாக இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்னாக உயர்த்தினர். உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு நூறு ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறை. அரை சதத்தினை கடந்த ராகுல் 57 ரன்களில் இருந்தபோது வாகப் ரியாஸ் வீசிய பந்தில் பாபர் அஸாமிடம் கேட்ச் ஆனார்.
அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராத்கோலி களமிறங்கினார். அவர் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்த துவங்கினார். மறுமுனையில் ரோகித் ஷர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். பாகிஸ்தான் பந்து வீசாசாளர்களை கதிகலங்க வைத்த இவர் சர்வதேச அரங்கில் தனது 24வது சதத்தினை பதிவு செய்தார். சதமடித்த பின்னரும் இவரது வேகம் குறையவில்லை. பவுண்டரிகளாக விளாசிய இவர் 140 ரன்களில் ஹசேன் அலி பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். பின் ஹார்திக் பாண்டியா விராத்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் சிறப்பாக ஆடிவந்த கோலி அரைசதத்தினை கடந்தார்.
ஹார்திக் பாண்டியா தனது அதிரடியை காட்டி 26 ரன்கள் குவித்த அமீர் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த தோணியும் அதே ஓவரில் வெளியேறினார். பின்னர் கோலி நிலைத்து ஆடி 77 ரன்கள் எடுத்த நிலையில் அமீரின் பந்தில் ஆட்டமிழந்ததாக கருதி வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அமீர் 3 விக்கெட்டுகளும், வாகப் ரியாஸ் மற்றும் ஹசேன் அலி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.