பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு பஃகர் ஜமான் மற்றும் இமாம் உல் அக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கி ஐந்தாவது ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் தசை பிடிப்பு காரணமாக போட்டியை விட்டு வெளியேறினார். எனவே அவருக்கு பதிலாக விஜய் சங்கர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் அக் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின் அந்த அணியின் நட்சத்திர வீரரான பாபர் அஸாம் களமிறங்கினார். இவர் பஃகர் ஜமானுடன் ஜோடி சேர்ந்து இலக்கை துரத்த துவங்கினார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இதில் பஃகர் ஜமான் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தினை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.
இதில் பாபர் அஸாம் 48 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பஃகர் ஜமானும் 68 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஹபீஸ், சப்ராஸ் அகமது மற்றும் சோயிப் மாலிக் என முண்ணனி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி 35 ஓவர்களுக்கு 166 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனால் பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது களத்திலிருந்த இமாட் வாசிம் மற்றும் சதாப் கான் இணைந்து 40 ஓவரிகளில் 212 ரன்கள் மட்டுமே குவித்ததால். இறுதியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விஜய் சங்கர், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி 140 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது இந்த தொடரில் இவரின் இரண்டாவது ஆட்ட நாயகன் விருதாகும்..