சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த அணிகளுக்கு மத்தியில் இந்திய அணி என்றாலே தனி மரியாதை உண்டு.
அதற்கு காரணம் என்னவென்றால் பல ஜாம்பவான்கள் சிறப்பாக விளையாடி நமது இந்திய அணிக்கு பெருமை சேர்த்து சென்றுள்ளனர். இன்றும் பல திறமையான வீரர்கள் நமது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். அதனால் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தலை சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. சர்வதேச டி20 போட்டிகளில், நமது இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) தலை சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக திகழும் தோனியின் சிறப்பம்சங்கள்
நமது இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ள கேப்டன் என்றால் அது தோனி மட்டும்தான். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் அதிக முறை இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஒரே வீரர் தோனி தான். இவர் இதுவரை மொத்தம் 72 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 61.74 ஆகும். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்து வருகிறார் தோனி. இவர் டி20 போட்டிகளில் மொத்தம் 34 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.
#2) விராட் கோலியின் சிறப்பம்சம்
சமீபகாலமாக விராட் கோலி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, மற்றும் டி20 போட்டி, ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலுமே தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் விளையாடும் ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், புதுப்புது சாதனைகளை படைத்துக் கொண்டே வருகிறார். விராட் கோலி இதுவரை மொத்தம் 20 அரை சதங்களை டி20 போட்டிகளில் விளாசியுள்ளார். ஆனால் இன்னும் ஒரு சதம் கூட டி20 போட்டிகளில் விராட் கோலி அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ள ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். டி20 போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 50.29 ஆகும்.
#3) ரோகித் சர்மாவின் சிறப்பம்சம்
ரோகித் சர்மா தற்போது தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் டி20 போட்டிகளில் மொத்தம் 4 சதங்கள் விளாசி, அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
#4) சுரேஷ் ரெய்னாவின் சிறப்பம்சம்
சர்வதேச டி20 போட்டிகளில் சாதனை நாயகனாக திகழ்ந்து வரும் பேட்ஸ்மேன்களில் ஒருவர், சுரேஷ் ரெய்னா. ஆனால் சமீபகாலமாக இவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டி20 போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் டி20 போட்டிகளில் இதுவரை மொத்தம் 42 கேட்ச்களை பிடித்துள்ளார்.
#5) பும்ரா மற்றும் சஹாலின் சிறப்பம்சங்கள்
தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் – 1 டெத் பவுலராக திகழ்ந்து வருபவர் பும்ரா. இந்திய அணியின் பந்துவீச்சு வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்தான். அதுமட்டுமின்றி சஹால் சமீபகாலமாக சூழலில் அசத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலுமே சராசரியான விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். இவர் டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.