ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள்
இந்திய அணி கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. நேற்றுடன் தொடர் முடிந்து இந்திய வீரர்கள் இன்று இந்தியாவிற்கு திரும்பினர். இந்த இரு வெளிநாட்டு தொடர் மூலம் இந்திய அணிக்கு நிறைய வலிமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழையால் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தது. அத்துடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு நாட்டு தொடரையும் 2-1 என முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது இந்திய அணி.
நியூசிலாந்து தொடரிலும் தனது ஆதிக்கத்தை இந்திய அணி தொடர்ந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரில் வெற்றிக்கு விளிம்பில் சென்று 2-1 என தோல்வியை தழுவியது இந்திய அணி.
இந்த இரு வெளிநாட்டு தொடர்களும் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றிகளின் மூலம் 2019 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணியில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்தக்கூடிய சில புதிய வீரர்களை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த 5 நன்மைகளை நாம் காண்போம்
#5.முகமது ஷமியின் அற்புதமான பந்துவீச்சு:
இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் முகமது ஷமி மிகவும் அற்புதமான ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது முழு ஆட்டத்தை நிருபித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது இவருடைய இடம் ஒருநாள் அணியில் நிரந்தரமாகியுள்ளது.
இந்த தொடரில்தான் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவருடைய தற்போதைய ஆட்டத்திறனில் எவ்வித சந்தேகமும் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் இவருடைய அற்புதமான பந்து வீச்சு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் என்றாலே முகமது ஷமிதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்டுகளையும், 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டு இன்னிங்ஸிலுமே சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார் முகமது ஷமி. அத்துடன் சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அணியிலும் இடம்பிடித்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். 2019 உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.