சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தலை சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களையும், மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களையும் இந்திய அணி கொண்டுள்ளது.
இதன் காரணமாகத்தான் இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் என ஓய்வுபெற்ற பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி தலை சிறந்த அணியாக இருந்தாலும், இன்னும் ஒருசில குறைகள் அணியில் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் குறைகள் என்னவென்று இதில் காண்போம்.
#1) முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் எந்த குழப்பமும் இல்லை:
இந்திய அணியின் முக்கிய வெற்றியாளர்களாக இருப்பவர்கள் இந்த முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தான். அதுவும் குறிப்பாக ரோகித் மற்றும் தவான் மிகச் சிறப்பான தொடக்கத்தை அனைத்து போட்டிகளிலும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களுக்கு மேல் அமைந்துவிட்டால் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில போட்டிகளில் தவான் விரைவில் அவுட்டாகி வெளியேறி விடுகிறார். அந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் அணியை ஒரு நல்ல நிலைமைக்கு எடுத்து செல்கின்றனர். எனவே தற்போது உள்ள இந்திய அணியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் எந்த குழப்பமும் இல்லை.
#2) நான்காவது இடத்தில் உள்ள பிரச்சனைகள்:
இந்திய அணியின் டாப் ஆர்டர் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பலாக தான் இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் அம்பத்தி ராயுடு. இந்திய அணியின் நான்காவது இடத்தில் உள்ள பிரச்சினையை சில போட்டிகளில் அம்பத்தி ராயுடு தீர்த்து வைத்தார்.
ஆனால் ஒரு சில போட்டிகளில் இந்திய அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சூழ்நிலையில் அம்பத்தி ராயுடு அணியை சரிவில் இருந்து மீட்க தவறிவிட்டார். எனவே தான் ஆஸ்திரேலிய தொடரில் தோனி நான்காவது வீரராக களம் இறங்கினார். நான்காவது இடத்தில் விளையாடிய தோனி தொடர்ந்து மூன்று அரை சதங்களை விளாசி அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் இன்றுவரை நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்பது என்று குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
#3) ஐந்தாவது பந்துவீச்சாளர் யார்??
இந்திய அணியை பொறுத்தவரை மிகச் சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் 5வது பந்து வீச்சாளராக யாரை உபயோகிப்பது என்று குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவிர்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அவர் சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார். சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்குகிறார். எனவே இன்னொரு மெயின் பவுலரை அணியில் சேர்க்கலாமா?? இல்லை கேதர் ஜாதவை 5வது பந்து வீச்சாளராக உபயோகிக்கலாமா?? என்று பல குழப்பங்கள் இந்திய அணியில் தற்போது உள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் உள்ள இந்த குழப்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா?? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.