இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையில் இருமுறை உலகக்கோப்பையை வென்ற இந்தியாதான் பேவரட்ஸ் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அம்பதி ராயுடு அணியின் நான்காவது வீரராகக் களமிறங்க வேண்டும். அதற்கான அனைத்து திறமைகளையும் அவர் கொண்டுள்ளார் என்றும் சோப்ரா கூறியுள்ளார். "இன்றிலிருந்து உலகக் கோப்பை நடக்கும் காலத்தைக் கணக்கிட்டு பார்த்தாலும், அல்லது எவ்வளவு காலத்தில் உலகக்கோப்பை நடைபெற்றாலும், என்னைப் பொறுத்தவரை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும். கோப்பையைப் போடியத்தில் இந்திய அணி கோப்பையைப் பிடித்ததாகவே பார்க்கிறேன். கோப்பையை வெல்ல தேவையான அனைத்து திறன்களையும் இந்திய அணி பெற்றுள்ளது.” என ஐசிசி உலக கோப்பை டிராபி டூர் நிகழ்வின்போது கூறினார்.
"பல சாதகமான விஷயங்களைக் கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது. பந்துவீச்சு சிறப்பாக உள்ளது, சிறந்த பேட்ஸ்மேன்களை அணி பெற்றுள்ளது. எனவே நிறைய காரணிகள் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை இந்தியாவிற்கு ஏற்றதாக இருக்கும். இரண்டு சாம்பியன் டிராபிகளை இங்கிலாந்து கடந்த காலங்களில் நடத்தியது. அதில் இந்திய அணி சாதித்தது. அதேபோல் 2019 உலகக் கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை வெல்ல முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.
உலகக்கோப்பை மே 30-ம் தேதி தொடங்குகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. 1983 மற்றும் 2011 சாம்பியன்களான இந்தியா ஜூன் 5 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகத் தங்களுடைய முதல் போட்டியைத் தொடங்குகிறது.
நான்காவது இடத்தில் ராயுடு விளையாடுவதை பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். "நாம் ஒரு டஜன் பேட்ஸ்மேன்களை நான்காவது இடத்தில் முயற்சித்தோம். ஆனால் ராயுடு இந்த இடத்தைப் பிடித்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இங்கிலாந்திற்கு விமானத்தில் செல்ல அவரது போர்டிங் பாஸ் என்னுடைய கருத்துப்படி ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நான்காவது இடத்தில் அவர் பேட்டிங் செய்வார்.” என 33 வயதான சோப்ரா நான்காவது இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற நீண்டநாள் பிரச்சனை பற்றிக் கூறினார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் ராயுடு 100 ரன்களை எடுத்தார். போட்டி முடிந்தபிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா, 4-வது இடத்தில் ராயுடு விளையடுவார் என்று கூறினார்.
ஐபிஎல் போட்டியில், தனது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்ட கோலியின் பரிந்துரை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.)-தான் முடிவு செய்ய வேண்டும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.
"ஐபிஎல் போட்டியில் ஓய்வு பெற வேண்டும் என்று தனது முக்கிய பந்து வீச்சாளர்களை ஏற்கனவே விராட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி பி.சி.சி.ஐ.தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இது பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேனுக்காகவும் இருக்க வேண்டும். உலகக் கோப்பைக்கு முன்னால் அதிக வேலைப்பளு அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.” என்றும் அவர் கூறினார்.
“உலகக் கோப்பைக்காக நன்றாகப் பயிற்சி பெறும் மற்றொரு வாய்ப்புதான் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள போட்டிகள். இன்னும் ஒருசில முடிவுகளை எடுக்க வேண்டும். பினிஷர் யார்?, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? என்பதில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் நியூசிலாந்து தொடர் முக்கியமானது. ஆனால் அந்தத் தொடரின் முடிவு ஜூன் மற்றும் ஜூலையில் உலகக்கோப்பையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என்று 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சோப்ரா கூறினார்.