கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தலைசிறந்த அணிகளில் ஒரு அணியாக திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடிய ஜாம்பவான்கள் தான். சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் சிறப்பாக விளையாடி, நமது இந்திய அணிக்கு பெருமை சேர்த்து சென்றுள்ளனர். தற்போதும் நமது இந்திய அணி, சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக தான் திகழ்ந்து வருகிறது. உலக கோப்பை தொடரில் நமது இந்திய அணி, அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் அடித்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) பெர்முடா அணிக்கு எதிராக ( 413 ரன்கள் )
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், இந்திய அணியும், பெர்முடா அணியும் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ராபின் உத்தப்பா மற்றும் கங்குலி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா முதல் ஓவரிலேயே 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு சேவாக் மற்றும் கங்குலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய சேவாக் 87 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய கங்குலி, 89 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் சிக்சர் மழை பொழிந்த யுவராஜ் சிங், 46 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். யுவராஜ் சிங் மொத்தம் 7 சிக்சர்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு வந்து அதிரடியாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 29 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்கள் குவித்தது. 414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் பெர்முடா அணி களமிறங்கியது. இந்த கடினமான இலக்கை பெர்முடா அணி, சேஸ் செய்ய முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது. பெர்முடா அணியில் அதிகபட்சமாக டேவிட் ஹெம்ப், 76 ரன்கள் அடித்தார்.
#2) இலங்கை அணிக்கு எதிராக ( 373 ரன்கள் )
1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், இலங்கை அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சவுரவ் கங்குலி மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சடகோபன் ரமேஷ் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பின்பு கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட், 129 பந்துகளில் 145 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இறுதிவரை வெளுத்து வாங்கிய சவுரவ் கங்குலி, 158 பந்துகளில் 183 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இலங்கை அணி இந்த கடினமான இலக்கை, சேஸ் செய்ய முடியாமல் 42 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே அடித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அரவிந்த டி சில்வா, 56 ரன்கள் அடித்தார்.