பெண்கள் டி20 உலகக்கோப்பை : அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி

Kaur & knight
Kaur & knight

பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆஸ்திரேலியா அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிருதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கவுர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். லீக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பகல் ஆட்டமாக விளையாடினர். முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணி இரவு ஆட்டத்தில் விளையாடியது.

தொடக்க வீராங்கனையான மந்தனா, தனது அதிரடியான ஆட்டத்தால் நல்ல தொடத்தை அளித்தார் என்றே சொல்லலாம். முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ரோட்ரிக்யூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் நிதானமாக விளையாடி 16 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் யாரும் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை. ஒருகட்டத்தில், 89 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த இந்தியா, அடுத்த 10 ரன்கள் சேர்க்க 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில், இந்தியா 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களே எடுத்தது. ஸ்ட்ராங் பேட்டிங் லைன் -அப் கொண்ட இந்திய அணியை இங்கிலாந்து எளிதில் கட்டுப்படுத்தியது, ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஹீதர் நைட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீராங்கனை டாமி பியொமெண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பந்து வீச்சில் நல்ல தொடக்கம் கிடைத்தது. நிதானமாக விளையாடிய டேனியெல்லே வியாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் களமிறங்கிய ஜோன்ஸ் மற்றும் நடலிய்யே ஸீவெர் அதிரடியாக விளையாடினார். 6வது ஓவரில் நடலிய்யே ஸீவரின் கேட்சினை பூனம் யாதவ் தவறவிட்டார். பின்னர் இதுவே இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்திய அணியின் சொதப்பலான ஃபீல்டிங்கைப் பயன்படுத்திக்கொண்ட அவர்கள், இருவரும் அரை சதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியாக, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்மூலம் தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த இந்திய அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

போட்டியின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் கவுர், அணியின் முடிவுகள் சில சமயம் சரியாக அமைகிறது, சில சமயம் தவறாக அமைகிறது. ஒரு போட்டியின் மூலம் ஒரு அணியை முழுமையாக தீர்மானிக்க முடியாது. இந்திய பெண்கள் அணி மிகவும் இளம் அணியாகும். நாங்கள் இப்பொழுதுதான் படிப்படியாக கற்றுகொண்டு வருகிறோம். நான் எனது அணியை நினைத்து பெருமைபடுகிறேன். வரும் காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.112 என்பதும் மிக எளிதாக சேஸ் செய்ய முடியாது. எங்கள் அணி பந்துவீச்சை சிறப்பாக செய்து 18 ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றுள்ளனர். இப்போட்டியின் மூலம் கடினமான சமயங்களில் எப்படி போட்டியை கையாள்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி இவ்வ்வருடத்தில் ஐசிசி நடத்திய ஆசிய கோப்பை மற்றும் உலக டி20 சேம்பியன்ஷிப் ஆகிய இரு தொடர்களிலுமே கோப்பை வெல்லும் தருவாயில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil