2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு நம்பர் - 4 இடம் பெரிய புதிராகவே உள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி யுவராஜ், ரகானே, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என பலரை பயன்படுத்தியும் சோபிக்க தவறினார்கள், அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராயுடுவை பரிசோதித்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வானார். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் ராயுடு முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்றார், இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய காரணத்தால் மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
அடுத்தது என்ன ?
2019 உலகக் கோப்பைக்கு இன்னும் 10 ஒருநாள் போட்டிகளே மீதமுள்ள நிலையில் இந்திய அணி தனது நம்பர் 4 இடத்தை நிரப்பாமல் தவித்து வருகின்றது. அடுத்து வரவுள்ள பத்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இவற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வரும் 23ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றது. தனது நம்பர்-4 புதிரை இந்திய அணி மீதமுள்ள போட்டிகளில் கண்டறியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தீர்வு :
இந்த வருடம் நடைபெறவிருக்கும் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணிக்கு 10 ஒருநாள் போட்டிகளை மீதம் உள்ளன, இவற்றில் 5 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரில், டொமெஸ்டிக் போட்டிகளில் சிறந்து விளங்கி வந்த ஷுப்மான் கில்ற்க்கு வாய்ப்பு வழங்கலாம்.
ஷுப்மான் கில் லிஸ்ட் ஏ போட்டிகளில் 36 போட்டிகளில் 1529 குவித்துள்ளார், சராசரி 47.78 ஆகும். இவற்றில் 4 சதங்களும் 7 அரை சதங்களும் உள்ளடங்கும்.
19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை, ரஞ்சி டிராபி போன்ற பல தொடர்களில் ஏராளமான ரன்களை குவித்துள்ளர்.
இவரிடம் நம்பர் 4 இடத்தில் விளையாடும் திறமையும் உண்டு, சுழற்பந்து வீச்சாளர்களை நன்கு எதிர்கொள்ளும் திறமை கொண்ட இவர் மிடில் ஓவர்களில் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
தோனி ஏன் சரியான 'நம்பர் 4' இல்லை ?
2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கு பின்பு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தோனி குறைந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார், இவர் எதிர்கொண்ட பந்துகளின் அளவை எதிர்கொண்ட அனைத்து பேட்ஸ்மென்களும் இவரை விட அதிக ஸ்டிரைக் ரேட்டை கொண்டுள்ளனர்கள்.
மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சுகளை அதிகம் எதிர்கொள்ளும் நம்பர் 4 இடத்தில் இவர் பிரகாசிப்பது சிரமமே, அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக செயல்படுவதால் பின்வரிசையில் களமிறங்கலாம்.
சமீபத்தில் விராட் கோலி தோனியின் இடம் குறித்து பேசியுள்ளார்.
"தோனி நம்பர் 5 இடத்தில் விளையாடுவதே அணிக்கும் அவருக்கும் சிறந்தது என நான் நினைக்கிறேன், இதன்மூலம் தோனி களத்தில் தேவைப்படும் பொழுது அதிரடியாகவும் போட்டிகளை ஃபினிஷ் செய்யவும் சரியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.