மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பை தொடரின் 6வது சீசனை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் 1996ல் நடத்தின. 12 அணிகள் மொத்தமாக பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதி, இறுதிப் போட்டி என 37 போட்டிகள் நடந்தன. இந்த உலகக்கோப்பை தொடரில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுவிற்கு 6 அணிகள் வீதம் இடம்பெற்றிருந்தது. முதல் 4 இடங்களை லீக் சுற்று முடிவில் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பாதுகாப்பின்மையால் இலங்கை சென்று விளையாட தயங்கின. இதனால் இலங்கை காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் காலிறுதியில் மோதின. அதில் இந்தியா வென்று அரையிறுதியில் இலங்கையை எதிர்கொண்டது. ஆனால் அரையிறுதியில் மோசமான தோல்வியை தழுவி இந்தியா வெளியேறிய காரணத்தால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு அப்போது நிறைவேறவில்லை.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நேரிட்டது. அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக உலகக்கோப்பையை வெல்லும் என்று நினைத்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்தவர்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அணில் கும்ளே ஆவார்கள்.
அரையிறுதியில் இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
#1 சச்சின் டெண்டுல்கர் மற்றும் நவ்ஜோட் சிங் சித்து
1992 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான அறிமுக வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டம் 1996 உலகக்கோப்பை தொடரில் வெளிபட்டது. இந்த உலகக் கோப்பை தொடரின் கென்யாவிற்கு எதிரான ஆரம்ப போட்டியில் சதமும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அரைசதமும் விளாசி இந்திய அணியை காலிறுதிக்கு அழைத்து சென்றார் சச்சின் டெண்டுல்கர். இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் 65 ரன்களை குவித்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி வெளியேறியது.
2013ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் அதன் பின் வெவ்வேறு பதவிகளில் இருந்தார். இவர் கிரிக்கெட் அறிவுரை கமிட்டியின் உறுப்பினராக உள்ளார். அத்துடன் "மும்பை இந்தியன்ஸ்" அணியின் அடையாளமாக திகழ்கிறார்.
மறுமுனையில் நவ்ஜோட் சிங் சித்து 1996 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். இவர் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் பாகிஸ்தான், ஜீம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக மேட்ச் வின்னிங் ரன்களை விளாசினார். இவரது கிரிக்கெட் வாழ்விற்கு பிறகு வர்னனையாளராகவும், நகைச்சுவை நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்து வந்தார். இதைத்தவிர இவர் முழு நேர அரசியல்வாதியாக வலம் வந்தார். பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சராக உள்ளார்.
#2 சஞ்சய் மஜ்ரேகர் மற்றும் முகமது அசாருதீன்
சஞ்சய் மஜ்ரேகர் 1987 முதல் 1996க்கும் இடைபட்ட காலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். அத்துடன் 1992 மற்றும் 1996 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். 1996 உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்ற இவர் அதிக விருவிருப்புடன் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் வர்ணணையாளராக திகழ்ந்து வருகிறார்.
முகமது அசாரூதின் இந்திய அணிக்காக 4 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றார். 25 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இவர் 8 அரைசதங்களுடன் 826 ரன்களை குவித்தார். 1996 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெறச் செய்தார். அந்த சமயத்தில் இவர் மோசமான ஆட்டத்திறனில் இருந்திருந்தாலும், இவரது கேப்டன்ஷீப் கை கொடுத்தது. சூதாட்டப் புகாரில் சிக்கிய காரணத்தால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை மோசமாக முடிவுக்கு வந்தது. இதிலிருந்து இவர் மீண்டு வர 12 வருடங்கள் ஆனது. தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாதியாக உள்ளார்.