இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை

கபில் தேவ் மற்றும் மஹிந்திரா சிங் தோனி
கபில் தேவ் மற்றும் மஹிந்திரா சிங் தோனி

ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் வருகின்ற 2019ஆம் வருடம், மே மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 1975ஆம் ஆண்டு முதல், அதாவது முதல் உலகக்கோப்பையில் இருந்து 2015 வரை நடந்த உலக கோப்பை அனைத்திலும் விளையாடியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த உலக கோப்பை போட்டிகள் இதுவரை 11 முறை நடந்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு (1983 மற்றும் 2011) முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

1975 முதல் 2015 வரை நடந்த இந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் பற்றிய தொகுப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

1975 - இங்கிலாந்து,

1975ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் உலக கோப்பையில் பங்கேற்று தனது "A" பிரிவில் உள்ள அணிகளுடன் விளையாடியது. அதில் இந்திய அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கிழக்கு ஆப்பிரிக்கா அணியிடம் 10 விக்கெட்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. பிறகு இந்திய அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணியிடம் நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று உலக கோப்பையை விட்டு வெளியேறியது.

1979 - இங்கிலாந்து,

1979ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது உலக கோப்பை போட்டியில் பங்கேற்றது. இதில் தனது "B" பிரிவில் உள்ள அணிகளிடம் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியும், கடைசியாக இலங்கை அணியிடம் 47 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்து ஒரு வெற்றிகூட பெறாமல் உலக கோப்பையை விட்டு வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி.

வெங்கட்ராகவன் - 1975 மற்றும் 1979 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்
வெங்கட்ராகவன் - 1975 மற்றும் 1979 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

1983 - இங்கிலாந்து,

1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், இரண்டு (1975 மற்றும் 1979) முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்தது கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் மொஹிந்தர் அமர்நாத் 7 ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

கபில் தேவ் - 1983 மற்றும் 1987 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்
கபில் தேவ் - 1983 மற்றும் 1987 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

1987 - இந்தியா மற்றும் பாகிஸ்தான்,

1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி தனது "A" பிரிவில் உள்ள அணிகளிடம் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஜிம்பாப்வே) இரண்டு முறை மோதி அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை போட்டியை விட்டு வெளியேறியது.

1992 - ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து,

1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி குரூப் போட்டிகளில் 7ஆவது இடம் பிடித்து உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, ஒரு போட்டி முடிவு அறிவிக்கப்படவில்லை. ஆகமொத்தம் 5 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.

1996 - பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை,

1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. இதில் இந்திய கிரிக்கெட் அணி தனது குரூப் பிரிவில் 6 புள்ளிகள் பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதி சுற்று போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டியில் இலங்கை அணிய எதிர்கொண்டது. இந்த அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற 132 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் வெறும் 2 விக்கெட்கள் மட்டுமே இருந்தன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி தோல்வி அடைவதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பை போட்டியை இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

1999 - இங்கிலாந்து,

1999ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் குரூப் "A" பிரிவில் இலங்கை, கென்யா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் பாகிஸ்தான் அணியிடம் மட்டும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மற்ற அணிகளிடம் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து) தோல்வியை தழுவியது. இந்த உலக கோப்பை போட்டியில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இருந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் உலக கோப்பை விட்டு வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி.

முகமது அசாருதீன் - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் (1992, 1996 மற்றும் 1999)
முகமது அசாருதீன் - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் (1992, 1996 மற்றும் 1999)

2003 - தென்னாப்பிரிக்கா,

2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் மற்ற அணிகளுக்கு அச்சத்தை வரவைத்தது. இந்த அச்சம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு துளி கூட இல்லை. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிடம் மட்டும் தோல்விகண்டது. குரூப் போட்டி மற்றும் இறுதிப்போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிடம் தோல்வியடைந்து இரண்டாவது முறை உலக கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது இந்திய கிரிக்கெட் அணி. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் 140 ரன்கள் அடித்து இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய ரன் (360) இலக்கை நிர்ணயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி

2007 - மேற்கிந்தியத்தீவுகள்,

2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்து. இந்த உலக கோப்பை போட்டியின் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வரவைத்தது. ஏனென்றால், தனது குரூப் பிரிவில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்து உலக கோப்பை போட்டியை விட்டு முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இந்திய கிரிக்கெட் அணி - 2007
இந்திய கிரிக்கெட் அணி - 2007

2011 - இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம்,

2011ஆம் ஆண்டு மஹிந்திரா சிங் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் (1996) உலக கோப்பை சாம்பியன் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு இரண்டாவது முறை உலக கோப்பையை வென்று கொடுத்தது. இந்தியாவில் உள்ள மும்பை மாநகரத்தில் நடந்த இந்த இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மஹிந்திரா சிங் தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் அடித்து இந்தியா கிரிக்கெட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார் மஹிந்திரா சிங் தோனி.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மஹிந்திரா சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மஹிந்திரா சிங் தோனி

2015 - ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து,

2015ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, மஹிந்திரா சிங் தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிடம் அரையிறுதி சுற்று போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலக கோப்பையை விட்டு வெளியேறியது. இந்த உலக கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தனது குரூப் போட்டிகளில் தொடர்ந்து ஆறு அணிகளிடம் (தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், அயர்லந்து, ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) வெற்றிப்பெற்று காலிறுதி சுற்று போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிராக 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 7 வெற்றிகளை பெற்று அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியா vs இந்தியா - அரையிறுதி போட்டி
ஆஸ்திரேலியா vs இந்தியா - அரையிறுதி போட்டி

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now