பொதுவாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால், பேட்டிங்கில் குறைந்தது 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். இல்லையெனில் வெற்றி பெறுவது சற்று கடினம் தான். 250 ரன்களுக்கு கீழ் அடித்தால் எதிரணியை கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
குறைவான ரன்களை அடித்தால், எதிரணியினர் அந்த இலக்கை பொறுமையாக நிலைத்து நின்று விளையாடி மிக எளிமையான முறையில் வெற்றி பெற்று விடுவார்கள். தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த அணி, நமது இந்திய அணி தான். ஆனால் இந்திய அணி ஒருசில ஒருநாள் போட்டிகளில் 120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி, அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எப்படி இந்திய அணி வெற்றி பெற்றது?? என்ற சுவாரசியமான போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி:
இந்தியா – 105 / 10
வங்கதேசம் – 58 / 10
2014ஆம் ஆண்டு இந்திய அணி, வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களை களமிறக்கியது. இந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் ரகானே களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரகானே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா மற்றும் ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் ரெய்னா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 27 ரன்களை அடித்தார். இறுதியில் இந்திய அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. வங்கதேச அணியின் சார்பில் டஸ்கின் அகமத் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி. வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான தமீம் இக்பால், மிதுன், ரஹீம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினார். மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட தவறினர். இறுதியில் வங்கதேச அணி 18 ஓவர்களின் முடிவில் 58 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி:
இந்தியா – 125 / 10
பாகிஸ்தான் – 85 / 10
1985 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. இந்திய அணியின் சார்பில் அசாருதீன் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் பாகிஸ்தான் அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. எனவே இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய இம்ரான் கான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே இந்த போட்டியில் இம்ரான் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.