உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய நிற சீருடை அணிந்து விளையாட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முழு பலத்துடன் சிறப்பாக விளையாடி வருகிறது. மற்ற அணிகளை விட இந்திய அணி அபார பலத்துடன் வெற்றியை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 6 போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் தலா ஒரு புள்ளிகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
ஆனால் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகிய இரு வீரர்கள் காயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஷிகர் தவான் தன் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கடந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக மூன்று ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வெளியேறினார். இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
அதேபோல் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்களின் தொடக்க வீரர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் பெரும் உதவியாக இருந்தது ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டமே.
நாளை நடைபெறும் போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அவர்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
இதற்கு இடையில் இனி வரும் போட்டிகளில் பல மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது. அதாவது இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆரஞ்சு நிறம் கொண்ட உடையை அணிந்து விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சீருடை காவி நிறத்தில் உள்ளதாக பல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோல காவி உடையணிந்து விளையாடுவது இதுவே முதல்முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற நாட்டு அணிகள் தங்களது சீருடைகளை அவ்வப்போது மாற்றுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஐசிசி செயற்குழு ஒரே நிறத்தில் சீருடையை அணிந்து இரு அணிகள் விளையாட அனுமதி மறுத்ததால் இரண்டில் எதாவது ஒரு அணி தங்களது ஜெர்ஸியின் நிறத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஐசிசி அறிவித்து உள்ளது. இதனால் இந்தியா இங்கிலாந்துடன் மோதப்போகும் போட்டியில் ஆரஞ்சு நிறம் கொண்ட உடையை அணிந்து விளையாட முடிவு செய்துள்ளது . இந்த சீருடையை அணிவதனால் பலதரப்பினரிடமிருந்து கருத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அணியான தென் ஆப்பிரிக்கா,பாகிஸ்தான் ,வங்காளதேசம், பச்சை நிறம் பிரதான சீருடையாக கொண்டுள்ளது. எனவே அவர்களிலும் வங்கதேச அணி மற்ற அணிகளுடன் மோதும் போது சிகப்பு நிற சீருடையையும் பயன்படுத்த உள்ளது.
இதற்குமுன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் இது போல இரண்டு நிற ஜெர்ஸிகளை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.