நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர் ஆனது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மத்தியில் மிக முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் சிறந்த வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஐக்கிய அரபு நாடுகள் அணிக்கு எதிராக ( 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றில், ஐக்கிய அரபு நாடுகள் அணியும், இந்திய அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அம்ஜட் அலி மற்றும் பெரேஞ்சர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த கிருஷ்ணா சந்திரன், வெறும் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய சாய்மன் அன்வர், 35 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் 31 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 102 ரன்கள் மட்டுமே அடித்தது.
103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தவான் வெறும் 14 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி, இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தனர். ரோகித் சர்மா 55 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
#2) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ( 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் கெயில் மற்றும் டுவைன் ஸ்மித் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கிறிஸ் கெயில் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சாமுவேல்ஸ், வெறும் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடிய ஜேசன் ஹோல்டர், 57 ரன்கள் விளாசினார். விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மேற்கிந்திய தீவுகள் அணி, இவரது அதிரடியால் 182 ரன்கள் அடித்தது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில், ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த விராட் கோலி, சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 33 ரன்கள் அடித்தார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் பேட்டிங் செய்ய வந்த மகேந்திர சிங் தோனி, நிதானமாக விளையாடி தனது விக்கெட்டை பறிகொடுக்காமல், 39 ஓவர்களின் முடிவில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். தோனி 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.