தற்போது ஆஸ்திரேலிய அணி, நம் இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகள், மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் கொண்டுவரவுள்ள மாற்றங்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோடியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. முதல் போட்டியில் தவானுக்கு பதிலாக ராகுல் களமிறக்கப்பட்டார். ரோகித் மற்றும் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். அந்த முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். எனவே 2வது டி20 போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக தவான் களமிறக்கப்பட்டார். இரண்டாவது டி20 போட்டியில் தவானும் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் மற்றும் தவான், தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக திகழ்ந்து வருகின்றனர். எனவே ராகுல்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டு, வழக்கம்போல் ரோகித் சர்மா மற்றும் தவானை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க உள்ளனர்.
#2) பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் இணைய உள்ளனர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இந்திய அணி, வேகப்பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கெளல் ஆகிய இருவரையும் உபயோகப்படுத்தியது. ஆனால், இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. எனவே நாளைய ஒருநாள் போட்டியில் வழக்கம்போல் முகமது ஷமி இந்திய அணியில் இணைய உள்ளார்.வேகப்பந்து வீச்சாளர்களில் ஷமியுடன், பும்ராவும் இணைந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
சுழற்பந்து வீச்சாளர்களில் சஹால் மற்றும் குருணால் பாண்டியாவை இந்திய அணி உபயோகப்படுத்தியது. இந்த சுழற்பந்து கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே நாளைய போட்டியில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி, இந்திய அணியில் இணைய உள்ளது.
#3) நாளைய போட்டியில் கேதார் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் விளையாட உள்ளனர்
இந்திய அணி டி20 தொடரில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே உபயோகப்படுத்தியது. பகுதிநேர பந்துவீச்சாளர்கள் ஒருவரை கூட இந்திய அணிய எடுக்கவில்லை. இதுவே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார். எனவே ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ், இந்திய அணியில் விளையாட உள்ளனர்.கேதார் ஜாதவ் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார். அதே சமயத்தில் விஜய் சங்கரும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி விஜய் சங்கரை பகுதிநேர பந்துவீச்சாளர் ஆகவும் அணியில் உபயோகப்படுத்தலாம். எனவே 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.