சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். அதே போல் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி அதிரடியாக விளையாடி, அதிக ரன்கள் குவித்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) பங்களாதேஷ் அணிக்கு எதிராக ( 370 ரன்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பங்களாதேஷ் அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. வீரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். நிதானமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 28 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த கௌதம் கம்பீர், 39 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்பு சேவாக் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இறுதிவரை வெளுத்து வாங்கிய வீரேந்தர் சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்த சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 84 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் குவித்தது.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய தமீம் இக்பால், 70 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன், 55 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் அடித்தது. எனவே இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) இங்கிலாந்து அணிக்கு எதிராக ( 338 ரன்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய சேவாக், 26 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார்.
அதன் பின்பு வந்த கௌதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். இறுதிவரை மிக சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 115 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 338 ரன்கள் குவித்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கெவின் பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கெவின் பீட்டர்சன் 31 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய இயான் பெல், 69 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதிவரை அதிரடியாக விளையாடிய ஸ்ட்ராஸ், 158 ரன்கள் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணியும் 338 ரன்கள் அடித்ததால் போட்டி டையில் முடிந்தது. எனவே இரண்டு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்பட்டது.