இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலாக எல்லா விளையாட்டு போட்டிகளையும் காண ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் கிரிக்கெட்டுக்கு மட்டும் மற்ற விளையாட்டை விட மவுசு அதிகம் என சொல்லலாம். ஒரு மத உணர்வை போன்று அவ்வளவு ஈடுபாட்டுடன் இதை பின்தொடரும் வெறித்தனமா ரசிகர்கள் ஏராளம். இதை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக விரைவில் இந்தியாவில் உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் வரப்போகிறது. குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் நகரில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது சர்தார் படேல் மைதானம், மொடேரா. இது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மற்றும் இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானத்தை விட அதிக இருக்கைகள் கொண்டதாகும்.
இந்த புதிய மைதானத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தை நேரில் காணலாம். தற்போதைய சாதனையான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1 இலட்சம் ரசிகர்கள் வரை அமரலாம். குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவரான திரு.பரிமால் நத்வானி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் கட்டட வேலைகளின் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
63 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த மைதானத்தின் செலவு 700 கோடி என கூறப்படுகிறது. மொடேராவின் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர் முறையை பிரபல நிறுவனமான லார்சென் & டோப்ரோ (LnT) வென்றது. வடிவமைப்புகளுக்கான வேலையை மும்பையை சேர்ந்த பாபுலஸ் என்ற நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. சர்தார் படேல் மைதானம் 1982ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பல சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் 2015ம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது.
மைதானத்தின் அமைப்பு :
ஒரு தனியார் பத்திரிகை வெளியிட்ட தகவலின் படி இந்த மைதானத்தில் பல புதிய வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. நான்கு உடை மற்றும் அறை (dressing room) மற்றும் நான்கு நீச்சல் குளங்களுடன் (Swimming Pool) வசதிகள் ஏற்பாடு செய்யப்படுள்ளது. மேலும் உயர்ரக கார்பொரேட் அறைகள், உணவு விடுதி என பல அம்சங்களை கொண்டுள்ளது. இதை தவிர வீரர்கள் மழை நேரத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காக உட்புற பயிற்சி மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 10 ஆயிரம் ரசிகர்களுடன் இம்மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியை நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.
சுருக்கமாக இம்மைதானத்தின் 8 சிறப்பம்சங்களை காண்போம்:
1. அடிக்கல் நாட்டு விழா ஜனவரி மதம் 2018 ஆம் ஆண்டு
2. பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நீண்ட நாள் கனவு
3. கட்டுமானப்பணிகள் - லார்சென் & டோப்ரோ, வடிவமைப்பு - பாபுலஸ் நிறுவனம்
4. உலகின் தற்போதைய பெரிய மைதானமான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை வடிவமைத்தவர்கள்
5. 63 ஏக்கரில் பரப்பளவு மற்றும் 1 இலட்சத்து 10 ஆயிரம் இருக்கைகள் கொண்டது
6. மொத்த செலவு ஏறத்தாழ 700 கோடி
7. உட்புற பயிற்சி மைதானம்
8. 3000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு