இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதை பார்க்கும் போது 2010 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போட்டிதான் நியாபகம் வருகிறது. இப்போட்டியில் மைக்கேல் ஹசி தனது சிறப்பான ஆட்டத்தை 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அசத்தினார். இந்திய அணிக்கு எதிரான 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், அடுத்த 3 போட்டிகளிலும் தமது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்து வென்று தொடரை கைப்பற்றியது. மூத்த வீரர்கள் அவ்வளவாக இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணி டி20 & ஓடிஐ தொடரை வென்றுள்ளது பாராட்டத்தக்கது.
2015ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதன் பிறகு நடந்த அனைத்து தொடர்களையும் வென்றது. எனவே இந்த ஒருநாள் தொடர் இழப்பு இந்திய அணிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்திய அணியில் நிலவிவந்த மாற்று தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பருக்கான பிரச்சினை இந்த தொடரிலும் முடிந்தபாடில்லை. கே.எல்.ராகுலுக்கு சரியாக வாய்ப்பளிக்காமலும், ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமலும் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு மற்றும் உஸ்மான் கவாஜா & பீட்டர் ஹான்ட்ஸ்கோம் பேட்டிங்கை மேம்படுத்த உதவியாக அமைந்தது இந்த ஒருநாள் தொடர். ஆரோன் ஃபின்ச் உலகக் கோப்பையில் தனது இடத்தை தக்க வைக்க சற்று அதிகம் உழைக்க வேண்டும்.
உலகக்கோப்பையை தக்க வைக்கும் நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா இந்த ஒருநாள் தொடரில் 76.60 சராசரியுடன் 383ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நம்பிக்கையான தொடக்க ஆட்டக்காரர் இத்தொடரின் மூலம் கிடைத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் தொடக்கத்திலிருந்தே கவாஜ மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் (47.08 சராசரியுடன் 236 ரன்கள்) தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த பேட்டிங் மூலம் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லா ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வலிமையான இரு பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளனர்.
ஆரோன் ஃபின்ச் 3வது ஒருநாள் போட்டியில் மட்டும் 93 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் இவரது கேப்டன்ஷிப் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரை வெல்ல காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கடைசியாக 2வருடங்களுக்கு முன்புதான் வென்றது குறிப்பிடத்தக்கது. ஷான் மார்ஷ் 3 போட்டிகளில் பங்கேற்று 23 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். எதிர்வரும் பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் தனது பழைய ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்டன் டர்னர் 4வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே உலகக் கோப்பை தேர்வில் இவரும் போட்டி போடுகிறார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3வது ஒருநாள் போட்டியில் அரைசதமடித்தார். பின் 4வது போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. 5வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி-யின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பேட் கமின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா (14 விக்கெட்டுகள் மற்றும் 11 விக்கெட்டுகள்) இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள். ஆடம் ஜாம்பா-வின் இந்த ஆட்டத்திறனால் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பிரச்சினை தீர்ந்தது. நாதன் லயான் இந்த தொடரில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பையில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய அணியில் நிலவி வந்த எந்த குறைகளும் களையப்படவில்லை
இந்திய அணிக்கு இந்த தொடரில் யார் யார் உலகக் கோப்பை அணியில் தேர்வு பெறுவார்கள் , யார் யார் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற சோதனையை நிகழ்த்தும் நோக்கில் இந்திய அணி செயல்பட்டது.
ஆனால் இந்த சோதனையில் இந்தியா தோல்வியை கண்டுள்ளது. மாற்று தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டிருந்த கே.எல்.ராகுலை ஒரேயொரு போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்டார். ரிஷப் பண்ட் தனது விக்கெட் கீப்பர் திறனை அதிகம் மேம்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும் இவர் சோபிக்கவில்லை. இந்திய அணி இவர்களுக்கு அளித்த வாய்ப்பை தவறாகவே அளித்துள்ளது. மாற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டிய கே.எல்.ராகுலை , களமிறக்கிய ஒரு போட்டியிலும் 3வது வீரராக களமிறக்கப்பட்டார். அனுபவமில்லாத இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-டிற்கு பதிலாக அணுபவ வீரர் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் களமிறக்கியிருக்கலாம்.
ஷிகார் தவான் இந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார். இவர் இந்திய அணியில் இருக்க காரணம் கடந்த சேம்பியன் டிராபியில் 338 ரன்களும் மற்றும் கடந்த உலகக் கோப்பையில் 412 ரன்களும் விளாசியதே ஆகும். விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் 2 சதங்களை விளாசினார்.
விஜய் சங்கர் அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தினார். ஆனால் பௌலிங்கில் சற்று கவனம் தேவை. 5போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். கேதார் ஜாதவ் 43 சராசரியுடன் 172 ரன்களை இந்த தொடரில் குவித்துள்ளார். குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புவனேஸ்வர் குமார் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளையும் , 5வது ஒருநாள் போட்டியில் 46 ரன்களையும் குவித்தார். ஆனால் சரியான பயிற்சி இல்லததால் 4வது ஒருநாள் போட்டியில் டெத் ஓவரில் அதிக ரன்களை பௌலிங்கில் வாரி வழங்கினார். ரவீந்திர ஜடேஜாவிற்கு மோசமான தொடராக அமைந்துள்ளது. இவர் மொத்தமாக 2 விக்கெட்டுகள் மற்றும் 45 ரன்களை மட்டுமே குவித்தார். கடைசி ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார். ஜாஸ்பிரிட் பூம்ரா 7 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தியுள்ளார்