ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று முகமது ஷமி மற்றும் பூம்ரா களமிறங்கினர். இன்றைய நாளில் வீசப்பட்ட முதல் பந்திலே இந்திய அணி தனது கடைசி விக்கெட்டையும் இழந்து மொத்தமாக 250 ரன்களை தனது முதல் இன்னிங்ஸில் அடித்தது. 10 நிமிட இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி தொடக்கவீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.
ஆஸ்திரேலியா அணிக்கு முதல் ஓவரிலேயே ஒரு பெரும் அதிர்ச்சியை அளித்தார் இந்திய வீரர் இஷாந்த் சர்மா. அவர் வீசிய 3 வது பந்திலேயே ஆரோன் ஃபின்ச் போல்ட் ஆனார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
பின்னர் களமிறங்கிய கவாஜா இந்திய அணியின் பந்துவீச்சை கணித்து மிகவும் பொறுமையாக விளையாடினார். 22 வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் மார்கஸ் ஹாரிஸ் முரளி விஜய்-யிடம் கேட்ச் ஆனார்.இவர் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் அடித்திருந்தது.
அதன்பின் களமிறங்கிய ஷான் மார்ஸ் 19 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களை மட்டுமே அடித்து அஸ்வின் சுழலில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் பொறுமையாக விளையாடி வந்த கவாஜாவும் அஸ்வின் வீசிய சுழலில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 125 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 28 ரன்களை அடித்தார்.
பின்னர் களமிறங்கிய பீட்டர் ஹான்ட்ஸ் கோம் மற்றும் டிராவிஸ் ஹெட் இந்திய அணி பந்துவீச்சை கணித்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இவர்களது ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 55 ஓவர்களை எதிர்கொண்டு 114 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் பூம்ரா வீசிய பந்தில் பீட்டர் ஹான்ட்ஸ் கோம் , விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் மொத்தமாக 93 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களை எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் இஷாந்த் ஷர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெறுமையை பெற்றார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். டிம் பெய்ன் 20 பந்தில் 1 பவுண்டரியுடன் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் களமிறங்கிய பேட் கமின்ஸ் 47 பந்துகளில் 10 ரன்களை எடுத்து பும்ராஹ் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 149 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து இந்திய அணியை விட 59 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் ஷர்மா மற்றும் பூம்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்ட்ராக் களத்தில் உள்ளனர்.