ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழன் அன்று அடிலெய்டில் தொடங்கியது.இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் அடித்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 91 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டார்க் களமிறங்கினர். ஸ்டார்க் பூம்ராவின் வேகத்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இடையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்றபின் 8வது விக்கெட்டிற்கு களமிறங்கிய நாதன் லயான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
நிதானமாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட், முகமது ஷமி வேகத்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 167 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 72 ரன்களை அடித்தார். பின்னர் வந்த ஹசில்வுட் -உம் ஷமி வீசிய அடுத்த பந்திலே ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களை எடுத்தது. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் பூம்ரா தலா 3 விக்கெட்டுகளையும் , ஷமி , இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரிஷப் ஃபன்ட் முதல் இன்னிங்சில் மட்டும் 6 கேட்சுகளை பிடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அதிக கேட்சுகளை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.
மழையின் காரணமாக இரண்டாது இன்னிங்ஸ் தாமதத்துடன் ஆரம்பித்தது. மழை நின்றபின் 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே எல் ராகுல் தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 6 ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே வந்தது. பிறகு 15வது ஒவரில் இருவரின் பார்ட்னர் ஷிப்பினால் 50 ரன்கள் வந்தது.
18வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தில் முரளி விஜய் , பீட்டர் ஹான்ட்ஸ் கோமிடம் கேட்ச் ஆனார். விஜய் மொத்தமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தார். இவர் தனது கடைசி 12 இன்னிங்ஸில் மொத்தமாக 100 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுமையாக விளையாடிய கே எல் ராகுல் ஹசில்வுட் வீசிய பந்தில் டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார் . ராகுல் மொத்தமாக 67 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 44 ரன்களை அடித்தார்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி , புஜாராவுடன் இனைந்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 58 வது ஓவரில் நாதன் லயான் ஓவரை எதிர்கொண்ட விராட் கோலி , ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். விராட் கோலி மொத்தமாக 104 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களை எடுத்தார்.
கோலி மற்றும் புஜாரா ஆகியோர் இணைந்து 71 ரன்கள் குவித்தனர். நாதன் லயான் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அதிக முறை( 6 முறை) டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 61 ஓவரில் 151 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்டார்க், ஹசில்வுட், லயான் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். புஜாரா 127 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களுடனும்
,
ரகானே 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.